(Thumbnail) அடையாளத்தைச் சிதைப்பதை இனியாவது நிறுத்துங்கள்!

 


இன்றைய நவீன உலகத்தில 'பார்வையாளர்கள் எண்ணிக்கை' (Views) மற்றும் சுய விளம்பரத்திற்காக ஊடக அறம் என்பது காற்றில் பறக்கவிடப்படுவதை நாம் தினுமும் பார்க்கிறோம். குறிப்பாக, யூடியூப் போன்ற தளங்களில் வைக்கப்படும் 'தம்நெயில்' (Thumbnail) கலாசாரம் ஒரு சமூகத்தின் பிம்பத்தையே தவறாகச் சித்தரிக்கத் துணிந்துவிட்டது.


யாழ்ப்பாணத்தில் ஒரு சில ரசிகர்கள் செய்யும் செயல்பாட்டை "யாழ் மக்கள்" அனைவரும் செய்வது போல ஒரு மாயையை உருவாக்கி, அதைத் தங்கள் வலைத்தள வளர்ச்சிக்காகச் செய்தியாக மாற்றுவது கண்டிக்கத்தக்கது. 


ஒரு தனிநபரின் அல்லது ஒரு சிறிய குழுவின் ரசனையை ஒரு ஒட்டுமொத்த மாவட்டத்தின் முடிவாகச் சித்தரிப்பது எவ்வளவு பெரிய அறியாமை? இத்தகைய செய்திகள், யாழ்ப்பாணத்து மக்கள் அனைவருமே ஒரு குறிப்பிட்ட நடிகரின் பின்னால் நிற்கிறார்கள் என்ற தவறான புரிதலை வெளியுலகிற்குத் திணிக்கின்றன.


ஊடகத் தர்மம் மற்றும் அடிப்படை ஊடக ஒழுக்கம் பற்றிய எந்தவொரு அறிவும் இல்லாமல், தங்களுக்குத் தேவையானதை எப்படியாவது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுபவர்களால் உண்மைகள் மறைக்கப்படுகின்றன. ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பத்தை ஒரு சமூகத்தின் பொது விருப்பமாகப் பொதுமைப்படுத்துவது ஊடக அறத்திற்கு எதிரானது.


தவறான தகவல்களைச் சரியானவை போலக் காட்டி மக்களை ஏமாற்றும் இந்த மலிவான உத்திகளை விட்டுவிட்டு, பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிடுவதே ஒரு சிறந்த ஊடகத்திற்கு அழகு. சுய விளம்பரத்திற்காக ஒரு மாவட்டத்தின் அடையாளத்தைச் சிதைப்பதை இனியாவது நிறுத்துங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.