குறிகட்டுவான் இறங்குதுறையில் நாகபூசணி அம்மன் சிலை அமைக்க தீர்மானம்!
புனரமைக்கப்பட்டுள்ள குறிகட்டுவான் இறங்குதுறை சுற்றுவட்டப் பகுதியில் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனின் சிலையை அமைப்பதற்கான தீர்மானம் வேலணை பிரதேச சபையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (17) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றபோது, பிரதேச சபை உறுப்பினர் சிவகுமார் குறிகட்டுவான் இறங்குதுறை சுற்றுவட்டத்தில் தீவகத்தின் முக்கிய அடையாளமாக விளங்கும் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனின் சிலையை நிறுவ வேண்டும் என முன்மொழிவு ஒன்றை சமர்ப்பித்தார்.
இம்முன்மொழிவிற்கு சபையின் பல உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். எனினும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். நயினாதீவு ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாகவும், பல மதங்களைச் சேர்ந்த மக்களும் வழிபாட்டாளர்களும் வருகை தரும் இடமாகவும் இருப்பதால், ஒரே மதத்தின் அடையாளத்தை முன்னிறுத்துவது பொருத்தமற்றது என அவர்கள் வாதிட்டனர்.
மேலும், நயினாதீவில் நான்கு மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருவதைக் குறிப்பிட்ட அவர்கள், அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான சின்னமோ அல்லது தீவகத்தின் பொதுவான பண்பாட்டு அடையாளமோ அங்கு அமைக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் இடையில் கடுமையான கருத்து மோதலும் வாக்குவாதமும் ஏற்பட்டது.
எனினும், சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் நயினாதீவு நாகபூசணி அம்மனின் சிலையை நிறுவ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், அதற்கான தீர்மானம் இறுதியில் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சிலை அமைப்பதற்கான அடுத்தகட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் அறிவித்தார்.
இந்தத் தீர்மானம் தீவகப் பகுதியில் மத, பண்பாட்டு மற்றும் சுற்றுலா அடையாளங்கள் தொடர்பான விவாதங்களுக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை