பாரதி ராஜா அவர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!!

 


இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று உடல் நல குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல் நாளை ஜூன் 11ஆம் தேதி , அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் மே 17 இயக்கத்தின் சார்பில் பாரதிராஜாவுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. மே 17 இயக்க வெளியிட்ட பதிவில்,

இயக்குனர் இமயம் அருந்திறல் தமிழர் ஐயா பாரதிராஜா மறைந்தார். தமிழ்க் கலை உலகின் தனிப்பெரும் ஆளுமையாய் விளங்கயவர். படித்த, நகரத்தன்மையான கதைகள், புராண இதிகாச கதைகள், மேற்குலக கதைகளின் தாக்கத்தில் உருவான கதைகள் என மூழ்கி இருந்த தமிழ்த்திரையுலகை சாமானிய- தமிழர்களின் வாழ்வியலை கதை மாந்தர்களாக, கதை களனாக மாற்றிய மாபெரும் ஆளுமை அவர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், புலிகளுக்கும் வெளிப்படையான ஆதரவை வழங்கியவர். 2009 இனப்படுகொலை போரின் பொழுது தனக்களிக்கப்பட்ட இந்திய அரசின் உயரிய விருதான 'பத்மஸ்ரீ' விருதினை திருப்பியளித்தவர்.

இலங்கையோடு கைகோர்த்து போரை நடத்திய இந்திய அரசிற்கு இமயம் பாரதிராஜாவின் போர்க்குரல் கடும் நெருக்கடியை கொடுத்தது. போர் குறித்த செய்திகளை தணிக்கை செய்த இந்திய அரசின் சதிகளை இவரது அறிவிப்பு அம்பலப்படுத்தியது.

தமிழ்த் திரையுலகின் இயக்குனர்கள், ஆளுமைகள், நடிகர்கள் ஆகியோரை அழைத்துக்கொண்டு இராமேஸ்வரத்தில் அவர் தலைமையில் நடந்த கண்டனப்போராட்டம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

அன்றைய காங்கிரஸ் அரசின் தலைமையாக இருந்த சோனியா காந்தி அம்மையார் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த போது அவருக்குக் கருப்புகொடி காட்டினார். இதனால் அவர் முன்னனி இயக்குனர்களோடு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழ் இனப்படுகொலைக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சியை கடுமையாக அவர் எதிர்த்த காரணத்தினால் அவரது அலுவலகம் காங்கிரஸ் குண்டர்களால் கடுமையாக தாக்கி சேதப்படுத்தப்பட்டது.

2009 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதற்காக அக்கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் எதிர்ப்பரப்புரையை மேற்கொண்டார். பல இடங்களில் காங்கிரஸ் தோல்வியை எதிர்கொண்டதற்கு அவரது போராட்டம் மிகமுக்கிய காரணியாக அமைந்தது.

2011ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியால் திணிக்கப்பட்ட ராஜீவ்கொலையில் குற்றசட்டப்பட்ட அப்பாவி 3 தமிழர்களுக்கு நிறைவேற்றப்பட இருந்த தூக்குத் தண்டனையை ரத்து செய்ய குரல்கொடுத்தார் 2017ம் ஆண்டில் ஈழத்தமிழர் படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட மே17 ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் விடுதலைக்காக துணிந்து குரல் கொடுத்தவர் ஐயா பாரதிராஜா.

தனது இறுதிக்காலம் முழுவதும் தமிழ் கலையுலகிற்காகவும், தமிழின உரிமைக்காகவும் அயராது குரல் எழுப்பியவர் இயக்குனர் இமையம் ஐயா பாரதிராஜா. தமிழினத்தின் உயர்விற்கு பங்களித்த அவரது வாழ்வை போற்றும் விதமாக 2026 மார்ச் மாதத்தில் மே17 இயக்கம், வாழ்நாள் சாதனையாளர் விருதான 'அருந்திறல் தமிழர்' பட்டத்தை வழங்கி பெருமை கொண்டது.

தமிழினத்தின் அழகியலை தனது திரைக்காவியங்கள் வழியே படைத்து, தமிழினத்தின் உரிமைக்காக அயராது போராடி ஒடுக்குமுறை எதிர்கொண்ட மாபெரும் கலைஞன், தமிழினத்தின் ஒப்பற்ற படைப்பாளி ஐயா பாரதிராஜா அவர்களுக்கு எமது இறுதி மரியாதையையும், வீரவணக்கத்தையும் செலுத்துகிறோம். -திருமுருகன் காந்தி, ஒருங்கிணைப்பாளர், மே பதினேழு இயக்கம்  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.