பாக்கியராஜின் காதல் விளையாட்டு!!
என் பதின்பருவத்தில்
எங்கள் வீட்டில்
' குங்குமம்', 'இதயம் பேசுகிறது'
இரு பத்திரிகைகளையும் வாங்குவோம்
இரண்டையும்
நான்தான் மாற்றி மாற்றி
படித்துக்கொண்டிருப்பேன்
ஒரு நாள்
'புதிய வார்ப்புகள்' படத்தில்
அந்தக் காலத்தில்
பக்கத்து வீட்டிற்கு குடிவருபவரையே
காதலிக்க முடியும் என்ற விதிப்படி
ரதி அக்னிகோத்ரி
பாக்கியராஜ்ஜிடம்
சிறுவன் ஹாஜா ஷெரிப்பை
காதல் தூதனுப்புவதைப் பார்த்தேன்
" எங்க அக்கா இந்த வாரம்
'இதயம் ( பேசுகிறது)'மட்டும்தான் வாங்குனாங்களாம்
உங்ககிட்ட 'குங்குமம்' இருந்தா
வாங்கிட்டு வர சொன்னாங்க" என
ஹாஜா ஷெரீப் சொன்னதும்.
பாக்கியராஜ்
"உங்கக்கா ' இதயத்தை' கொடுத்தாதான்
சார் 'குங்குமம்' கொடுப்பார் என்று
போய்ச் சொல்லு" எனத் திருப்பி அனுப்ப,
ரதி " நான் இதுவரைக்கும்
யார்கிட்டேயும் இதயத்த கொடுத்ததில்ல உங்ககிட்டதான் கொடுத்திருக்கேன் என்று சொல்லு' என 'இதயம் பேசுகிறது' பத்திரிகையை
கொடுத்தனுப்புவார்
அதுவரை
இதயம் பேசுகிறது பத்திரிகையில்
மணியனின் ' நைட் கிளப்' பயணக் கதைகளை
படித்துக்கொண்டிருந்த நான்
இந்த குறியீட்டுக் காதலில்
மனதைப் பறிகொடுத்தேன்
அப்போது நான் படித்துக்கொண்டிருந்த
குங்குமமும் இதயம் பேசுகிறதும்
நான் எந்தப் பெண்ணோடும்
பரிமாறிக்கொள்ளப்படாத
ஒருபோதும் காதல் தூதாக மாறாத
ரகசியப் பிரதிகளாகவே இருந்து
பிறகு எடைக்குச் சென்றன
ஆயினும் அது
ஆண்களும் பெண்களும்
பத்திரிகைகள் படித்த காலம்
தொடர்கதைகள் படித்து
மனம் மயங்கிய காலம்
பத்திரிகைகளை
பரஸ்பரம் பறிமாறிக் கொண்ட காலம்
பத்திரிகைகளின் பெயர்களை
காதல் குறியீடாக்கி
விளையாண்ட காலம்
வீடியோ அழைப்புகள் இல்லாத
அதிகாலை நான்கு மணிவரை
' சாட்' இல்லாத காலம்
ஒரு வார்த்தை பேச
ஓராயிரம் முறை
தயங்கி அஞ்சிய காலம்
பெண்கள் தாவணியணிந்த காலம்
இரட்டை சடை போட்ட காலம்
பூ வைக்க எரிச்சல் படாத காலம்
இந்தக் காலம்
இதயங்கள்
வெறும் எமோஜிகளாகவும்
குங்குமம் வெறும்
ஸ்டிக்கர் பொட்டுகளாகவும்
மாறிவிட்ட காலம்
நான் ஒன்றும்
அந்தக் காலத்திற்காக
ஏங்கிப் போகவில்லை
ஆனால்
எல்லாம் வெட்ட வெளியாக இல்லாத
மனிதர்கள் கொஞ்சம் அப்பாவிகளாக
இருந்த காலம் அது
அப்படி ஒரு காலம் இருந்ததற்கு
இப்போது சாட்சியாக இருப்பது
பாக்கியராஜின் அந்தப் படம் மட்டும்தான்
அந்த அப்பாவி மனிதர்கள்
கடைசியில் பாக்கிராஜ்ஜின்
படங்களில் காணப்பட்டு
பிறகு மறைந்து போனார்கள்
இன்றைக்கு
பாக்கியராஜ்ஜும் மறைந்து போனார்
27.6.2026
மனுஷ்ய புத்திரன்
'

.jpeg
)





கருத்துகள் இல்லை