நீதிபதிகளின் ஓய்வு வயது தொடர்பான அறிவிப்பு!!
மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை கட்டமைப்பில் உள்ள நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் உத்தியோகபூர்வ அனுமதி பெறப்படவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று (11) நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர், நீதிபதிகள் மட்டுமன்றி ஏனைய தொழில்வல்லுநர்களும் தங்களது ஓய்வுபெறும் வயதை அதிகரிக்குமாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார்.
அந்தக் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் நியாயமான முறையில் பரிசீலனை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், சில கோரிக்கைகள் நியாயமான அடிப்படையைக் கொண்டுள்ளன என்றும், சில கோரிக்கைகள் அரசியல் பின்னணியுடன் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வலியுறுத்தினார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை