யாழ். தொழிநுட்பவியல் கல்லூரியில் மாபெரும் குளிரூட்டப்பட்ட நடமாடும் கோள்மண்டலம் திறந்து வைப்பு!📸
யாழ்ப்பாணம் தொழிநுட்பவியல் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் குளிரூட்டப்பட்ட நடமாடும் கோள்மண்டலம் இன்று (01.07.2026) புதன்கிழமை காலை 10.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கோள்மண்டலக் கூடத்தின் நாடாவை வெட்டி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து சர்வமதத் தலைவர்களின் ஆசியுரைகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கோள்மண்டலக் காட்சி தொகுப்பு வடக்கு மாகாணத்திற்கும் குறிப்பாக கல்வித்துறைக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
நவீன வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நடமாடும் கோள்மண்டலம் மூலம் சூரியன், நட்சத்திரங்கள் மற்றும் விண்வெளி தொடர்பான விடயங்களை மாணவர்கள் யதார்த்தமான அனுபவத்துடன் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அறிவியல் அறிவை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இக்கோள்மண்டலம் பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் விண்வெளி அறிவியலை நெருக்கமாக அறிந்து கொள்ளும் சிறந்த வாய்ப்பாக அமையும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மாவட்டத்திற்குள்ளேயே இவ்வாறான நவீன அறிவியல் காட்சியகத்தை பார்வையிடும் வாய்ப்பை ஏற்படுத்திய ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் அவர் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், யாழ். தொழிநுட்பவியல் கல்லூரி சமூகத்தினர், அனுசரணையாளர்கள், நடமாடும் கோள்மண்டலத்தின் இணைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட குழுவினர், மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
குறித்த மாபெரும் குளிரூட்டப்பட்ட நடமாடும் கோள்மண்டலக் காட்சிக்கூடம் ஜூலை 01ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 09ஆம் திகதி வரை தினமும் மாலை 05.00 மணி முதல் 06.30 மணி வரையும், இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரையும் இடம்பெறவுள்ளது.
மாகாண கல்வி அமைச்சின் அனுமதியுடன் நடைபெறும் இந்நிகழ்வை பாடசாலை மாணவர்கள் முற்பதிவு செய்து பார்வையிட முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல்களுக்கு 077 7826217 அல்லது 076 1089005 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.










.jpeg
)





கருத்துகள் இல்லை