மௌனத்தின் பல்திறமை - தனுஷ்கா ரமேஷ்!
கலைவிளக்கின் கருணைக்கரங்கள் - அறிமுகம் .
பெயரொன்று அவள் சூட்டியதல்ல. பாடசாலை முற்றத்துப் பரபரப்பில் பிறந்த பட்டப்பெயர். சுட்டித்தனம் சுமந்த "வாலு". தனுஷ்கா தேய்ந்தாள். வாலு வளர்ந்தது. பெயருக்கும் பெண்ணுக்கும் பிரிவில்லை. ஏனெனில் அந்த வாலுத்தனம் தான் பின்னாளில் கேமரா ஏந்தி, மௌனம் காத்து, மிருகமும் பறவையும் வேட்டையாடும் வித்தையானது.
மண்ணது மட்டக்களப்பு ஊரது களுவாஞ்சிக்குடி. நாடகமும் நடனமும் நரம்பில் ஊறிய கிராமம். அம்மண் தந்த அன்பு ஒரு பெண்ணை கேமரா தொட்ட கணம் அது. வீட்டுச் சுவர் விழவில்லை. விழுந்தது மனம் "பாவம்" என்றது சமூகம். "போதும்" என்றது பயம். அவள் உடையவில்லை. ஏனெனில் சாதனை சமூகத்தால் சபிக்கப்படும் என்பது சிறுவயதில் கற்ற சத்தியம்.
அவள் நடிகை. ஆனால் நிறைந்த அடையாளம் நிழற்படக் கலைஞி. கேமரா முன் நிற்பது கூத்து பின் நிற்பது கூர்மை. மனித முகம் மறந்து மிருக விழியில் மின்னும் மௌனம் தேடுவாள். "கருவி தூக்குபவன் கலைஞனல்ல. காத்திருப்பின் கனலைச் சுமப்பவனே கலைஞன்" என்பது கோட்பாடு. லென்ஸ் கடந்தது, ஒளி கடந்தது, எஞ்சியது ஒன்றே மௌனம்.
தோல்வி இல்லை தொலைந்தது துயரம். தோல்வி என்பது தொடக்கமே. "பெண்ணுக்குப் பொருந்தாது" என்ற பழிச்சொல்லைப் புன்னகையால் புதைத்தாள். ஏளனம், எதிர்ப்பு, எல்லை எல்லாம் எடை குறைந்த தூசு.
சினிமா சாலை, செட் சத்திரம். "இருமுகம்" தந்த தெளிவு. நடிப்பு நகல் அல்ல.நிஜமும் கனவும் நெருப்பில் நனைந்து வெளிவரும் நிலை.
அவள் வாசித்தது "மலரும் இதயம் ஒளிரும் வாழ்கை". வழி காட்டியது கிஷான் அண்ணாவின் கரம் சொல்வது ஒன்று "வாழ்கை வசந்தம் வலி வந்தால் வாய் நிறையச் சிரி வைராக்கியமே வெற்றிக்கு வழி."
வறுமையில் வாடும் வதங்கிய குழந்தை. அதுவே அவள் அகப்படுத்திய அசிங்க அழகு. அங்கே அலங்காரம் இல்லை. அப்பட்டமான ஆத்மா பிரதிபலித்தது.
இறுதி வேண்டுகோள் இதுவே பெண்ணைப் பெண்ணாய்ப் பார். பார்வையைப் படித்துப் பூட்டாதே. பூட்டு உடையும் போது பூமியே பூவாகும்.உங்கள் கலைச்சேவை மேலும் சிறப்பானதாக அமைய அன்பின் வாழ்த்துகள்.
வி. அபிவர்ணா,
முல்லைத்தீவு.

.jpeg
)





கருத்துகள் இல்லை