குதறப்படும் குழந்தைகள் உலகம் "
" ஏனடா வீட்டுப்பாடம் செய்யேல்லை? "
" ரீச்சர், வீட்டில ஒரே சண்டை, அப்பா குடிச்சிட்டு வந்து அம்மாவோட சண்டை பிடிச்சுக்கொண்டே இருப்பார், இரவு பத்து பொலிஸ் வந்தது, எப்ப பாத்தாலும் சண்டை, வீட்டவீட்டை படிக்கவே ஏலாது ரீச்சர்.... "
இது ஒரு மாணவனின் பதில்.
" சாப்பிட்டீங்களா? "
" இல்லை ரீச்சர்"
" ஏனடா, மத்தியானம் சாப்பிடேல்லையா? "
" இல்லை ரீச்சர், அம்மா சமைக்கேல்லை, "
" ஏன் அம்மா சமைக்கேல்லை? "
" அப்பா வேலை செய்த காசை எல்லாம் குடிச்சிட்டு வந்திட்டார், காசில்லை எண்டு அம்மா சமைக்கேல்லை"
இது ஆறு வயது குழந்தை சொன்ன பதில்.
" ஏன் ஒரு கிழமை படிக்க வரேல்லை? "
" ரீச்சர், வீட்டை சண்டை ரீச்சர், அப்பா, அடிச்சு துரத்தி, வீட்டை விட்டு கலைச்சு, வேற இடத்தில போய் தான் இருக்கிறம், அதுதான் வரேல்லை"
" ஏனம்மா சட்டை தோய்க்கேல்லையா? செருப்பு எங்க? "
" அம்மா வேலைக்கு போய், வர நேரம் போட்டுது ரீச்சர், அதுதான் சட்டை தோய்க்கேல்லை"
" வீட்டிலை ஆரார் இருக்கிறீங்கள்? "
" நானும் அப்பாவும் அண்ணாவும் தான் ரீச்சர்"
"அம்மா இல்லையா?"
" அம்மா அப்பாவோடை சண்டை பிடிச்சிட்டு, வேற ஆரோடையோ போட்டாவாம், அப்பா சொன்னவர்"
சிவந்த கண்களும் தடித்த உதடுகளும் வறண்ட பார்வையுமாக திரிகிற ஆக்களைப் பார்க்கும் போது, மனதில் ஒருவித வேதனை தலைதூக்குகிறது. இவர்கள் எதிர்காலத்தை கட்டி எழுப்ப வேண்டிய எமது தூண்கள். அல்லது எதிர்கால தலைவர்களை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்புக்குரியவர்கள். ஆனால், அந்த சிந்தனை சிறிதுமின்றி, தம்மையும் அழித்து, குடும்பத்தையும் அழிக்கிற பொல்லாத செயலைச் செய்கின்றனர்.
எளிமையான கிராமத்து மக்களின் வாழ்க்கை என்பது ஒரு காலத்தில் மிகவும் அழகானதாக இருந்தது, அவர்கள் வஞ்சகமற்ற, சூதுவாதில்லாத மனிதர்களாக வாழ்வதைக் கண்டிருந்தோம், ஆனால் இப்போது, கிராமங்களில் பரவியுள்ள சட்டவிரோத மதுப்பாவனை மற்றும் போதைப்பாவனை போன்றவற்றால் அவர்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டுள்ளது. எப்போதும் மது மயக்கத்தில் இருப்பதால் வாழ்க்கை பற்றிய புரிதலே இல்லாதவர்களாக மாறியுள்ளனர். கிராமங்கள் அபாயகரமான ஒரு நிலைமையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
அண்மையில் மாணவர்கள் சிலர் எதிர்கொள்கிற துன்பியல் சம்பவங்களைப் பார்த்தபோதும் கேட்ட போதும் குதூகலமான குழந்தைப் பருவத்தை கொன்று புதைக்கிற பெரியவர்களை என்ன சொல்லி திட்டுவது என்று தெரியவில்லை.
நீதி நியாயங்கள் அற்று பிள்ளைகள் தண்டிக்கப்படுவதைக் காணும் போது மனம் கனத்து விடுகிறது. அவர்களின் அழகான உலகத்தைச் சிதைத்து, சின்னாபின்னமாக்கிவிட்டு, கடைசி காலங்களில் அழுவதாலோ, அரற்றுவதாலோ ஒருவித பிரயோசனமும் இல்லை.
இந்தச் சமூகம் எதை நோக்கிச் செல்கிறது,?
கடைசியில் எதைக்காணப்போகிறது?
அன்பு, பாசம் கருணை, இரக்கம் இவை ஏதுமில்லாத மனித ஜடங்களை வளர்த்து விட்டு, துயரமடையப் போகிறோம் என்பதில் ஐயமில்லை.
கோபிகை.
"

.jpeg
)





கருத்துகள் இல்லை