மெஸ்ஸி - யமால் வரலாற்று சந்திப்பு..!

 



உலக கால்பந்தின் வரலாற்றில் மிகச் சிறப்பான தருணங்களில் ஒன்றாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி அமையவுள்ளது.


நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினா மற்றும் ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணிகள் மோதும் இந்தப் போட்டியில், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியும், அவரது வாரிசாகக் கருதப்படும் லமின் யமாலும் முதல் முறையாக ஒரே மைதானத்தில் எதிரணிகளாக களமிறங்குகின்றனர்.

39 வயதான மெஸ்ஸியும், 19 வயதான லமின் யமாலும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சந்திப்பது கால்பந்து ரசிகர்களுக்கு வரலாற்று தருணமாக பார்க்கப்படுகிறது. ஆனால், இவர்கள் இருவரும் சந்திப்பது இதுவே முதல் முறை அல்ல.

2007ஆம் ஆண்டு, பார்சிலோனா அணியின் இளம் நட்சத்திரமாக உருவெடுத்து வந்த 20 வயது மெஸ்ஸி, வெறும் ஐந்து மாத குழந்தையாக இருந்த லமின் யமாலை கையில் தூக்கி குளிப்பாட்டிய புகைப்படங்கள் இன்று உலகம் முழுவதும் பேசப்படும் நினைவுச் சின்னங்களாக மாறியுள்ளன.

அந்த புகைப்படங்களை பார்சிலோனாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஜோன் மோன்ஃபோர்ட் எடுத்திருந்தார்.

யூரோ 2024 தொடரில் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றபோது, லமின் யமாலின் தந்தை தனது இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படத்தை "இரு ஜாம்பவான்களின் தொடக்கம்" என்ற தலைப்புடன் பகிர்ந்ததைத் தொடர்ந்து அவை மீண்டும் பரவலாக பேசப்பட்டது.

கத்தலான் நாளிதழான Sport, பார்சிலோனா மற்றும் யுனிசெஃப் இணைந்து நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற குடும்பங்களுக்கு, தங்களது குழந்தையுடன் பார்சிலோனா முதல் அணியின் வீரர்களுடன் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அந்த போட்டியில் லமின் யமாலின் குடும்பமும் தேர்வு செய்யப்பட்டது.

அன்றைய தினம் முற்றிலும் தற்செயலாக, லமின் யமாலுடன் புகைப்படம் எடுக்க நியமிக்கப்பட்ட வீரர் லியோனல் மெஸ்ஸிதான். அந்த புகைப்படங்கள் பார்சிலோனாவின் கேம்ப் நௌ மைதானத்தின் விருந்தினர் உடைமாற்றும் அறையில் எடுக்கப்பட்டன.

"குழந்தையை எப்படி கையாள்வது என்று மெஸ்ஸிக்கே தெரியவில்லை" புகைப்படக் கலைஞர் ஜோன் மோன்ஃபோர்ட் BBC Sport-க்கு அளித்த பேட்டியில், "மெஸ்ஸி மிகவும் அமைதியான, வெகுளியான மனிதர். ஒரு சிறிய குழந்தையை திடீரென கையில் தூக்கி புகைப்படம் எடுக்க வேண்டிய சூழல் வந்தபோது, என்ன செய்வது என்று அவருக்கே தெரியாமல் இருந்தது.

ஆனால் சில நிமிடங்களில் அதற்கேற்றபடி பழகிக் கொண்டார்," என்று தெரிவித்துள்ளார்.

மேலும், லமின் யமாலின் தாய் ஷீலா எபானா மிகவும் ஒத்துழைப்புடன் இருந்ததாகவும், அந்த குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்தில் இருந்தாலும் மிகவும் பணிவானவர்களாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.