வரலாறு அறிவோம்!!

 




காலியில் தமிழர்கள் வாழ்ந்த மலை குறித்து தெரியுமா?


காலி, பத்தேகம பகுதியில் அமைந்துள்ளது சன்தரவல (Sandarawala) என்ற பழைமையான குளம். 


இது வரலாறு, நாட்டுப்புறக் கதைகள் மற்றும் மர்ம நம்பிக்கைகளுடன் தொடர்புடைய ஒரு முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது.


இந்தக் குளத்தின் அருகில் “ஹெடி தெமல கந்த” (Hedi Demala Kanda) எனப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மலைப் பகுதியும் உள்ளது.


வரலாற்று குறிப்புகளின்படி, கி.பி. 1215ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த கலிங்க மாகன் (Kalinga Magha) பொலனறுவை இராச்சியத்தை கைப்பற்றி 21 ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் இரண்டாம் பராக்கிரமபாகு மன்னர் அவரை தோற்கடித்தார்.


பத்தேகம சன்தரவலவின் வரலாறு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள “ஹெடி தெமல கந்த ஹா சன்தரவல இதிஹாசயே பிந்தக்” என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி, கலிங்க மாகனின் படையில் இருந்த சன்தர (Sandara) என்ற தளபதியின் கட்டுப்பாட்டில் இருந்த வீரர்கள் இந்த மலைப் பகுதியில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. 


இந்தப் பகுதியில் தமிழர்கள் வாழ்ந்ததால், இந்த மலைக்கு “ஹெடி தெமல கந்த” என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


பின்னர் இரண்டாம் பராக்கிரமபாகு மன்னர் கலிங்க மாகனுக்கு எதிராக போர் தொடுத்தபோது, இந்த மலைப் பகுதியில் இருந்த படையினர் முற்றுகையிடப்பட்டனர். 


உடைமையில் இருந்த மதிப்பு மிக்க பொருட்களை எடுத்துக் கொண்ட சன்தர, அவற்றுடன், மலையின் அடிவாரத்தில் இருந்த குளத்தில் குதித்ததாக உள்ளூர் வரலாறு கூறுகிறது.


இந்தக் குளத்தைச் சுற்றி பல மர்மக் கதைகள் இன்றும் நிலவுகின்றன. சன்தர அவர் புதைத்த செல்வங்களை பாதுகாக்க,  தங்க காதணிகளுடன் கூடிய விலாங்கு மீனாக (eel) பிறந்து குளத்தில் வாழ்கிறார் என்ற நம்பிக்கை  கிராம மக்களிடையே உள்ளது.


மேலும், குளத்தில் இருந்து தங்கப் பாத்திரங்கள் மற்றும் பழைமையான பொருட்கள் தோன்றியதாகவும், அவற்றை எடுத்துச் சென்றவர்களுக்கு பின்னர் துரதிர்ஷ்டங்கள் ஏற்பட்டதாகவும் நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன. குளத்தில் மீன்பிடிக்க முயன்றவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டதாக உள்ளூர் நம்பிக்கைகள் உள்ளன.


இந்தக் குளம் தொடர்பாக மற்றொரு கதையும் பரவலாக கூறப்படுகிறது. அண்மையில் பாலம் அமைக்கும் பணியின்போது, இரண்டு தலைகள் கொண்ட தெய்வ உருவம் ஒன்று சேற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகவும், அதை எடுத்துச் சென்ற கண்காணிப்பாளரின் குடும்பம் பின்னர் பல துயரங்களை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.


வரட்சி காலங்களில் இந்தக் குளத்தை வற்றச் செய்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் உள்ளது. கடந்த காலங்களில் குறைந்தது மூன்று முறை குளம் வற்றச் செய்யப்பட்டதாகவும், ஒவ்வொரு முறையும் மழை பெய்ததாகவும் கூறப்படுகிறது.


சுமார் 175 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாகவும், பின்னர் ஆங்கிலேயர் போமன் (Bowman) என்பவரால் இரண்டாவது முறையாகவும் குளம் வற்றச் செய்யப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 


பத்தேகம பகுதியில் தேயிலைத் தோட்டங்களை அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவரான போமன், அவருடைய மகுருகொட தோட்டம் கடும் வரட்சியை எதிர்கொண்டபோது தொழிலாளர்களின் ஆலோசனையின் பேரில் குளத்தை வற்றச் செய்ததாக கூறப்படுகிறது. 


குளம் பாதியளவு வற்றியபோது கனமழை பெய்து ஜின் கங்கை ஆற்றிலும் வெள்ளம் ஏற்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சுமார் 1960ஆம் ஆண்டு கடும் வரட்சியின்போது, தொழிலதிபர் கங்காபட முதலாளி என்பவரால் மூன்றாவது முறையாக குளம் வற்றச் செய்யப்பட்டதாகவும், அப்போதும் பாதியளவு நீர் அகற்றப்பட்டபோது மழை பெய்ததாகவும் கூறப்படுகிறது.


இவ்வளவு வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட சன்தரவல குளம் தற்போது போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. சட்டவிரோத நில நிரப்பல்கள் மற்றும் குப்பைகள் காரணமாக அதன் இயற்கை அழகு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


வரலாறு, மர்மக் கதைகள் மற்றும் மக்கள் நம்பிக்கைகளை கொண்டுள்ள இந்தப் பழைமையான குளம், பாதுகாக்கப்பட வேண்டிய இலங்கையின் முக்கியமான பாரம்பரிய இடங்களில் ஒன்றாக உள்ளது.



பகிர்வு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.