வருமா இனி அந்தக்காலம்!!

 



ஷெல் அடிக்கும் போது எங்கே வந்து விழும், யார் சாவார்கள் என்று தெரியாத காலம். ஆனால் சிட்டுக் குருவிகளைப் போல் மக்கள் மகிழ்ச்சியாக பறந்து திரிந்த காலம்.



எல்லோரும் படிக்க வேண்டும், எல்லோருமே சித்தியடைய வேண்டும் என்று மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், ஊர் மக்களும் ஒன்றாக விரும்பிய பொற்காலம்.


ஒரே ஒரு கடந்த கால வினாக்களின் கோவையை (Past exam Papers), நண்பர்களுக்கிடையே முறைவைத்து இரவு பகலாக மாறி மாறி பகிர்ந்து படித்த பசுமையான காலம்.


ஒரு நண்பனின் வீட்டு அரிக்கேன் லாம்பு சிம்னி உடைந்து விட, அவன் நண்பன் நகர சபை வாசலில் இருந்த விளக்கை ஆட்டையைப் போட்டுக் கொண்டு வந்து கொடுத்த கலப்படம் இல்லாத காலம்.


பெறுபேறுகள் வரும் போது படிப்பித்தவர்கள், ஊர் மக்கள், தெரிந்தவர்களுக்கு ரொபி வாங்கிக் கொடு என்று பூரிப்போடு கையில் காசை திணிக்கும் அன்பு உள்ளங்கள்,


இன்னும் இன்னும் …………………………

சொல்லிக் கொண்டே போகலாம்.


அந்த கொடிய போர்க் காலத்திலும், பொருளாதார தடை, நெருக்கடியிலும் வட மாகாணம் கல்வியில் முன்னணி இடத்தையே பெற்றுக் கொண்டிருந்தது. அது ஒரு சமூக வாழ்வியல், கூட்டு முயற்சியின், கடின உழைப்பின், தன்னலமற்ற சிந்தனைகளின் வெற்றி.


தன் பிள்ளை மட்டுமே சித்தி பெற வேண்டும் என்று ஒளித்து ஒளித்து தனிப்பட்ட Zoom வகுப்புக்களுக்கு கொண்டு திரியும் பெற்றோர்கள், பாடசாலைகளில் படிப்பிக்காமல் தங்களின் தனிப்பட்ட online classes க்கு அழைப்பு விடும் ஆசிரியர்கள்,பக்கத்து வீட்டில் யார் வசிக்கிறார்கள் என்று கூடத் தெரியாத ஒரு உடைந்த, பிளவு பட்ட சமூகம் (Fragmented Society) கல்வியில் பின் தங்கி விட்டோம் என ஓலமிடுவது வேடிக்கையாக இருக்கிறது.


“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.