பண்டகப்பிள்ளையார் ஆலய சித்திரத்தேர் மண்ணில் புதைந்து மீண்டது!!

 



உடுப்பிட்டி தெற்கு பண்டகைப் பிள்ளையார் ஆலய புதிய சித்திரத்தேர் வெள்ளோட்டப் பெருவிழா இன்று 10.08.2026 திங்கட்கிழமை மதியம் சிறப்பாக இடம்பெற்றது.



பண்டகைப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவசிறீ குமாரசிவ சேவற்கொடியோன் குருக்கள் தலைமையில் ஆரம்பமான வெள்ளோட்ட பெருவிழாவில் யாழ்ப்பாணம் - ஸ்ரீ சிவகுருநாத குருபீடம் வேதாந்த மட தலைமை சுவாமிகள் சிறீமத் வேத வித்தியாசாகர் அவர்களின் நல்லாசிகளுடனும் மதியம் ஒரு மணியளவில் வெள்ளோட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகின. 


கவிஞரும் எழுத்தாளருமான பொன் சுகந்தன் அவர்கள் நேர்முக வர்ணனையை வழங்கினார்.


ஆலய வெளிவீதி மணல்பரப்பு ஆகையால்  தேர் சில்லு மணலில் சிறிது புதையுண்டு தேர் நகராமல் இருந்தது. 


பக்தர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் தேரை இழுத்தனர்.


தொடர்ந்து புதையுண்ட பக்கமாக உள்ள சில்லுகளுக்கு மரப்பலகைகள், பனை மரங்களை போட்டு பக்தர்களின் தீவிர முயற்சியினாலும் ஆலய முகப்பு பக்கமாக தேர் நகர்ந்தது.


தொடர்ந்து உழவியந்திரத்தின் உதவியுடனும், பக்தர்களின் அயராத முயற்சியினாலும் தேர் சிறிது சிறிதாக நகரத் தொடங்கியது.


தென்மேற்கு மூலையிலும் சிறிது நேரம் தேர் நகராமல் இருந்து பின் சக்கரங்களுக்கு இளைஞர்கள் முண்டு கொடுத்து தீவிரமாக முயன்று தேர் நகர்ந்தது.


பண்டகைப் பிள்ளையார் ஆலய பக்தர்களின் விடா முயற்சியின் பலனாக சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின் தேர் இருப்பிடத்தை வந்தடைந்தது.


தொடர்ந்து சித்திரத்தேர் சிறப்புமலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. 


கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளரும், எழுத்தாளரும், கல்வியலாளருமான அமிர்தலிங்கம் பவணந்தி அவர்கள் நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார்.


இறுதியாக அன்னதானத்துடன் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தன.


உடுப்பிட்டி விஸ்வப் பிரம்மசிறீ நாகரத்தினம் மகேந்திரம் ஆச்சாரியாரின் தலைமையிலும், தாவடி விஸ்வப் பிரம்ம சிறீ ஐயாத்துரை இலங்கேஸ்வரன் ஆச்சாரியாரின் தலைமையிலான தாவடி துரையர் சிற்பாலயக் குழுவினரின் கைவண்ணத்திலும் எம்பெருமானுக்கான இவ்வெழில்மிகு சித்திரத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. தேரின் திருக்கலச நிர்மாண வேலைகளை திருகோணமலை விஸ்வப் பிரம்மசிறீ சபாபதி சிவசோதிலிங்கம் ஆச்சாரியார் சிறப்பாக வடிவமைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.