அனோஜனைக் பாதுகாப்பதில் நமக்குத் தேவையானது பொறுப்புணர்வும் நிதானமும் - “அனோஜன் "நா" காக்க வேண்டும்”


சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கைத் தமிழரான சிவராசா அனோஜனை உயிருடன் மீட்டெடுப்பதற்கான இராஜதந்திர முயற்சிகள் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன.


இது இனிமேல் ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட போராட்டம் மாத்திரமல்ல. ஒரு இலங்கைப் பிரஜையின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அரசின் பொறுப்பு, இராஜதந்திரத்தின் நுணுக்கம், சட்டத்தின் சிக்கல், இரு நாடுகளுக்கிடையிலான உறவு, சமூகத்தின் பொறுப்புணர்வு ஆகிய அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ள ஒரு மிகுந்த நுட்பமான மனிதாபிமான விவகாரமாக இது மாறியுள்ளது.


நாடாளுமன்றத்தில் இன்று, செப்டெம்பர் 22ஆம் திகதி உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அனோஜனின் வழக்கில் அரசாங்கம் சட்ட மற்றும் இராஜதந்திர ரீதியில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, நாடாளுமன்றப் பிரதிச் சபாநாயகர் ரிஷ்வி சாலியின் தலைமையில் ஆளும் தரப்பையும் எதிர்க்கட்சியையும் சேர்ந்த உறுப்பினர்களை உள்ளடக்கிய தூதுக்குழுவொன்றை சவூதி அரேபியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையிலிருந்து அவருக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து சாத்தியமான வழிகளையும் ஆராய்வதாகும்.


மேலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சார்பில் சவூதி மன்னரிடம் கையளிக்கப்படவுள்ள விசேட கடிதத்தின் மூலம், அனோஜனுக்கு மன்னிப்பு அல்லது தண்டனைக் குறைப்பு வழங்குமாறு இலங்கை அரசாங்கம் கோர உள்ளது. ஜனாதிபதியும் அனோஜனின் பெற்றோரைச் சந்தித்து, அவரை விடுவிப்பதற்கான சட்ட மற்றும் இராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக உறுதியளித்துள்ளார்.


அத்துடன், சவூதி அரேபியாவில் அனோஜனுக்காக மேற்கொள்ளப்படும் தற்போதைய மற்றும் எதிர்கால சட்ட நடவடிக்கைகளுக்கான செலவுகளை அரசாங்கம் பொறுப்பேற்கும் எனவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குடும்பத்தினரிடமிருந்து ஏற்கனவே பெறப்பட்டிருந்த மேன்முறையீட்டு செலவுத் தொகையும் மீள வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதில் இன்னொரு முக்கியமான அம்சம் இருக்கிறது. அனோஜன் சட்டவிரோதமாக சவூதி அரேபியாவுக்குள் சென்றவர் அல்ல. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சட்டபூர்வமான வழிமுறையின் ஊடாக அந்த நாட்டுக்குச் சென்ற இலங்கைப் பணியாளர். எனவே, ஒரு இலங்கைப் பிரஜை வெளிநாட்டில் எதிர் கொண்டுள்ள மிகக் கடுமையான சட்ட நெருக்கடியின் இந்தத் தருணத்தில், அவருக்குத் தேவையான தூதரக, சட்ட மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவது அரசின் பொறுப்பாகும்.


ஆனால் அதே நேரத்தில் நாம் மறந்துவிடக்கூடாத ஒரு உண்மை உள்ளது.ஒரு நாட்டுக்குள் காலடி வைத்தவுடன் அந்த நாட்டின் சட்டம் நம்மைச் சூழ்ந்துகொள்கிறது.


நாம் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த அரசியல் அல்லது சமூகக் கருத்தைக் கொண்டவர்களாக இருந்தாலும், வெளிநாட்டில் வசிக்கும் போது அந்நாட்டின் சட்டங்களையும் சமூக உணர்வுகளையும் மதிக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.


சவூதி அரேபியாவின் நீதித்துறை அமைப்பு இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் இயங்குகிறது. அந்நாட்டின் அதிகாரபூர்வ விளக்கங்களின்படி  நீதித்துறை இஸ்லாமிய ஷரியாவை அடிப்படையாகக் கொண்ட சட்ட அமைப்பின் கீழ் செயல்படுகிறது.


மதத்தை அவமதிப்பதாகக் கருதப்படும் வெளிப்பாடுகள் தொடர்பாகவும் சவூதி சட்ட அமைப்பில் கடுமையான சட்டப் பிரிவுகள் உள்ளன. எனவே, இலங்கையில் இயல்பானதாகவோ அல்லது கருத்துச் சுதந்திரத்தின் வரம்புக்குள் இருப்பதாகவோ கருதப்படும் ஒரு வெளிப்பாடு, வேறொரு நாட்டின் சட்டப் பின்னணியில் முற்றிலும் வேறுபட்ட சட்ட விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.


அதனால், அனோஜனின் வழக்கை அணுகும்போது “இலங்கையில் இது குற்றமா?” என்ற கேள்வியை மட்டும் முன்வைப்பது போதாது. “அவர் இருந்த நாட்டின் சட்டம் அந்தச் செயலை எவ்வாறு பார்க்கிறது?” என்பதையும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இது அனோஜனை குற்றவாளியாக்குவதற்கான வாதமல்ல. அதேபோல், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நியாயப்படுத்துவதற்கான வாதமும் அல்ல.

மாறாக, அவரை உயிருடன் மீட்டெடுப்பதற்குத் தேவையான யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கான முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டும்.


இப்போது நமக்கு மிகவும் தேவைப்படுவது – நிதானம் - அனோஜனின் விடுதலைக்காக அரசாங்கம் இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்த நேரத்தில், அவரது வழக்கைச் சுற்றியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.


சமூக வலைத்தளங்களில் இருந்து வரும் ஒவ்வொரு பதிவு, ஒவ்வொரு கருத்து, ஒவ்வொரு காணொளி, ஒவ்வொரு நேர்காணலும் இந்த விவகாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக, வழக்கின் சட்ட மற்றும் இராஜதந்திர நிலைமை முழுமையாகத் தெளிவடையாத நிலையில், அனோஜனுடன் தொடர்புடைய தகவல்களை உறுதிப்படுத்தாமல் வெளியிடுவது அல்லது அவருடைய தனிப்பட்ட உரையாடல்களை பொதுவெளிக்கு கொண்டுவருவது, அவருக்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்கலாம்.


எனவே, அனோஜனை நேசிப்பவர்கள் முதலில் அவரைக் காப்பாற்ற வேண்டுமே தவிர, அவரைச் சுற்றி புதிய சர்ச்சைகளை உருவாக்கக்கூடாது. அவருடன் தொடர்புடைய எந்தத் தகவலையும் வெளியிடுவதற்கு முன் அதன் விளைவுகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளப் பயனர்கள் அனைவரும் இந்தப் பொறுப்புணர்வை கடைப்பிடிக்க வேண்டிய தருணம் இது.


“அனோஜன் நா காக்க வேண்டும்”


இது ஒரு சாதாரண அறிவுரை அல்ல. அனோஜனின் உயிரைக் காப்பாற்றும் போராட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகவே இது பார்க்கப்பட வேண்டும்.அவரது மனநிலையைப் பாதிக்கக்கூடிய தகவல்கள் அவரைச் சுற்றி பரவாமல் இருப்பதும் முக்கியம். அவர் மன உளைச்சலில் கூறக்கூடிய எந்தவொரு தனிப்பட்ட கருத்தையும் உடனடியாக ஊடகங்களுக்கும் சமூக வலைத்தளங்களுக்கும் கொண்டு செல்வது தவிர்க்கப்பட வேண்டும். அவருடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் அனைவரும், குறிப்பாக அவருடைய தற்போதைய சட்ட மற்றும் இராஜதந்திர நிலைமையை அறிந்தவர்கள், மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஒரு வார்த்தை அவரை காப்பாற்றக்கூடும். ஒரு வார்த்தை அவருக்கு மேலும் ஆபத்தை உருவாக்கக்கூடும். அதனால்தான் இந்த நேரத்தில் உணர்ச்சியை விட நிதானம் மேலோங்க வேண்டும்.


வெளிநாட்டில் வாழும் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிடும் போது, அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதைக் காட்டிலும், அந்த நேரத்தில் அவர் எந்த நாட்டின் சட்ட அதிகார எல்லைக்குள் இருக்கிறார் என்பதே சட்ட ரீதியாக முக்கியத்துவம் பெறக்கூடும். ஒரு சமூக வலைத்தளப் பதிவு எந்த நாட்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டது, அந்த நாட்டின் சட்டங்கள் அதனை எவ்வாறு வரையறுக்கின்றன என்பன போன்ற விடயங்கள் வழக்குகளின் போது முக்கியத்துவம் பெறலாம். எனவே, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் ஒரு விடயத்தை மனதில் பதித்துக்கொள்ள வேண்டும்:


வெளிநாடு என்பது வெறும் வேலை செய்யும் இடமல்ல; அது வேறொரு சட்ட அமைப்பின் கீழ் வாழும் இடமும் ஆகும். அந்த நாட்டின் சட்டம் பிடிக்கவில்லை என்றால், சட்டத்தை மீறுவது தீர்வாகாது. சட்டப்பூர்வமான வழிகளில் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.


இப்போது நீதிமன்றத்துக்கு அப்பால் இருக்கும் ஒரு கதவு-  அனோஜனின் வழக்கில் சட்டரீதியான வழிகள் தொடர்ந்தும் ஆராயப்படுகின்றன. அதேவேளை, இலங்கை அரசாங்கம் இராஜதந்திர மற்றும் மனிதாபிமான வழிகளையும் முன்னெடுத்து வருகிறது. அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தபடி, சவூதி அதிகாரிகளுடனான தொடர்புகளும், சட்ட நிபுணர்களுடனான ஆலோசனைகளும் தொடர்கின்றன. இந்த நிலையில், இலங்கை எதிர்பார்க்கும் மிக முக்கியமான முடிவு – அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான கருணை மற்றும் தண்டனை நிவாரணம்.


அதற்காக சவூதி அரசின் உயர்மட்ட இராஜதந்திரத் தொடர்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

இது அரசியல் கட்சிகளுக்கு இடையிலான போட்டியாக மாறக்கூடாது. இது தனிநபர் புகழுக்கான மேடையாக மாறக்கூடாது. இது சமூக ஊடகப் பிரபலம் அடைவதற்கான வாய்ப்பாகவும் மாறக்கூடாது.

இது ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சி.


அதனால் அரசாங்கம் அமைக்கும் அதிகாரபூர்வ பொறிமுறையுடனும், அனோஜனின் குடும்பத்துடனும், சட்டத்தரணிகளுடனும், சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரிகளுடனும் ஒருங்கிணைந்து செயற்படுவதே இத்தருணத்தில் பொறுப்பான அணுகுமுறையாகும்.


ஒரு மனித உயிருக்கு முன்னால் நமது வேறுபாடுகள் சிறியவை அனோஜனின் வழக்கு, சட்டத்தை மதிப்பதன் அவசியத்தையும், வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு இலங்கையரும் தாம் வாழும் நாட்டின் சட்டத்தையும் சமூக உணர்வுகளையும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் மீண்டும் நினைவூட்டுகிறது. அதேவேளை, ஒரு தவறுக்காக ஒரு மனித உயிரே பணயம் வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், மனிதாபிமானத்தின் கதவும் மூடப்படக்கூடாது.


இலங்கை அரசாங்கம் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினரையும் இணைத்துக்கொண்டு செயல்பட முன்வந்திருப்பது, இது கட்சி அரசியலைத் தாண்டிய ஒரு தேசியப் பொறுப்பாக அணுகப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. அனோஜனை மீட்பதற்கான முயற்சியில் அரசாங்கம், எதிர்க்கட்சிகள், சட்டத்தரணிகள், தூதரக அதிகாரிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒரே இலக்கை முன்னிறுத்த வேண்டும்:


“அனோஜன் உயிருடன் நாடு திரும்ப வேண்டும்.”

அதற்கான வழியில், எந்தவொரு தரப்பினரின் பொறுப்பற்ற கருத்தும் அல்லது நடவடிக்கையும் இந்த இராஜதந்திர முயற்சிக்கு இடையூறாக மாறாதிருப்பது அவசியம்.


அனோஜனின் குடும்பத்தின் கண்ணீருக்கு அரசியல் நிறம் தேவையில்லை. - அனோஜனின் உயிருக்கு சமூக ஊடக ஆரவாரம் தேவையில்லை. - அனோஜனுக்கு இப்போது தேவைப்படுவது — நிதானம். - சட்ட அறிவு.

இராஜதந்திரம். - மனிதாபிமானம். மற்றும் ஒருங்கிணைந்த பொறுப்புணர்வு.


அனோஜனைக் காப்போம். ஆனால் அவரைக் காப்பாற்றும் முயற்சியையே ஆபத்தில் ஆழ்த்தாத வகையில் காப்போம்.


#SivarasaAnojan #SaveAnojan #SaudiArabia #SriLanka #Diplomacy #HumanRights #Justice #TamilCommunity

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.