மந்துவில் படுகொலை நினைவேந்தல்!!

 



முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(15) உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது

.

குறிப்பாக கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் திகதியன்று மந்துவில் சந்திப் பகுதியில் இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 24 அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் 27 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

வருடம் தோறும் பல்வேறு அமைப்புக்கள் பல்வேறு தரப்பினர் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்க இருந்த போதும் இம்முறை யாரும் குறித்த நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்க முன்வராத நிலையில் குறித்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற மந்துவில் சந்தி வளாகத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகளால் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அந்தவகையில் குறித்த படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகள் பொதுச்சுடரை ஏற்றி, நிகழ்வேந்தல் நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர்.

தொடர்ந்து குறித்த படுகொலைச் சம்பவத்தின்போது உயிர்நீத்தவர்களின் உறவுகள் மலர்மாலை அணிவித்து, ஈகைச்சடேரேற்றி, மலர்தூவி, கண்ணீர் சொரிந்து உணர்வெழுச்சியுடன் தமது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர். இருப்பினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வீடியோ புகைப்படம் எடுக்க வேண்டாம் என மக்கள் கோரினர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.