பாடசாலை அதிபரின் உள்ளத்தில் இருந்து!

 



ஆறு ஆண்டுகளுக்கு முன் கிளி/இராமகிருஸண வித்தியாலயத்தின் அதிபராக இருந்தபோது இதே நாள் அலுவலகத்திற்கு முன் நடந்த அந்தச் சிறிய சந்திப்பு… இன்று வரை என் மனதில் அழியாத நினைவாகவே உள்ளது.



சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தச் சிறுவனின் தந்தை அதிவேகமாக உந்துருளியை செலுத்தியபோது, கிளிநொச்சி நகர பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.


அதன்பிறகு, தனது பிறந்தநாளில் இந்தச் சிறுவன் என்னைச் சந்திக்க வந்திருந்தான். அப்போது அவனை அருகில் அமர வைத்து, அன்புடன் கட்டியணைத்து, அவனுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டேன்.


அந்தக் கணத்தில் அவன் முகத்தில் மலர்ந்த அந்தச் சிரிப்பு… இன்று நினைத்தாலும் என் மனதை நெகிழச் செய்கிறது.


தந்தையை இழந்து, அன்பையும் அரவணைப்பையும் இழந்த நிலையில் இருந்த அந்தச் சிறுவனுக்கு, ஒரு கணமேனும் தந்தையின் அன்பைப் போன்ற ஓர் அரவணைப்பையும், ஆறுதலையும், ஒரு சிறிய சிரிப்பையும் கொடுக்க முடிந்தது என்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.


இன்றும் அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது, ஒரு குழந்தையின் மனதில் நாம் விதைக்கும் அன்பான ஒரு நொடி, அவனது வாழ்நாள் முழுவதும் அழியாத நினைவாக மாறக்கூடும் என்பதை உணர்கிறேன்.


உறவுகளை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு நாம் ஒவ்வொருவரும் சிறிதளவாவது அன்பையும் அரவணைப்பையும் வழங்குவோம். அவர்களின் வாழ்வில் நம்மால் ஏற்படுத்தப்படும் அந்தச் சிறிய மாற்றமே, அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமையலாம்.


அந்தப் பிள்ளையின் சிரிப்பை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ❤️

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.