ஏறாவூரில் அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல்!


ஏறாவூர் நகரப் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல், பிரதேச செயலாளர் திரு. எஸ்.எச். முஸம்மில் அவர்களின் தலைமையில் இன்று (20) பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.


இக்கலந்துரையாடலில் ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். நழீம், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத், ஏறாவூர் நகரசபை கௌரவ உறுப்பினர் எம்.ஐ.ஏ நாஸர், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள், முப்படையினர், ஏறாவூர் பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


இதன்போது, எதிர்வரும் காலங்களில் எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சி மற்றும் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் விளக்கமளித்தார். அத்துடன், பிரதேச மட்டத்தில் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்காக முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தயார்நிலை வேலைத்திட்டங்கள் தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களிடம் கேட்டறியப்பட்டது.


மேலும், அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு விரைவாக இடம்பெயரச் செய்தல், பாதிக்கப்படக்கூடிய மக்களை முன்கூட்டியே அடையாளம் காணுதல் மற்றும் இடம்பெயரும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.


அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்து, பொது மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுப்பதே இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.