“கோரங்கி: ஆந்திர புயலால் அழிந்த வன்னியர் வணிக சாம்ராஜ்யம்!”


வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் தற்போது ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தை தாக்கிய ஒரு பெரும் புயலில் – ‘கோரங்கி’ எனும் ஊரின் வன்னியர்களின் வணிக சாம்ராஜ்யம் தகர்ந்து போனது. அந்த வரலாற்றை சுருக்கமாக காண்போம்!


ஆந்திராவின் கோதாவரி ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள கோரங்கி எனும் ஊர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஒரு மிகப்பெரிய வர்த்தக துறைமுகமாகவும், கப்பல் கட்டும் தளமாகவும் இருந்தது. ஆங்கிலேயர்களின் பல வணிக கப்பல்கள் இங்கு கட்டப்பட்டன. பர்மாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வணிகப் போக்குவரத்தின் மையமாக கோரங்கி இருந்தது.


கோரங்கி துறமுகத்தின் முதன்மையான வணிகர்களாக வன்னியர்கள் இருந்தனர். அவர்களில் இருந்து மிகப்பெரிய செல்வந்தர்கள் உருவாகினர். 


“பினபோத்து கஜேந்துருடு”


பினபோத்து கஜேந்துருடு (Pinapotu Gajendrudu) எனும் கப்பல் தொழிலதிபர் 1759 ஆம் ஆண்டு வாக்கில் ‘கோனசீமா திருப்பதி’ எனப்படும் வாடபள்ளி வெங்கடேஸ்வர சாமி கோவிலை கட்டினார். 275 ஏக்கர் நிலமும் ஏராளமான நகைகளையும் இக்கோவிலுக்கு வழங்கினார். அரிதான சந்தனமரத்தில் வெங்கடேஸ்வர சாமி சிலையை அமைத்தார்.


“கோபநாதி கிருஷ்ணம வர்மா”


கோபநாதி கிருஷ்ணம வர்மா (1775 – 1835), கோதாவரி ஆற்றில் கப்பல் தொழில் செய்தார். பெரும் செல்வந்தரான இவர் தனது நிலங்களையும் நகைகளையும் அளித்து 1823ஆம் ஆண்டில் அந்தர்வேதி லட்சுமி நரசிம்மசாமி கோவிலை எழுப்பினார்.


“மல்லாடி சத்தியலிங்க நாயகர்”


கோரங்கியில் பிறந்த மல்லாடி சத்தியலிங்க நாயகர் (1840 – 1915), அங்கிருந்து பர்மா சென்று, ரங்கூன் நகரின் ஒரு மிகப்பெரிய கப்பல் அதிபராக இருந்தார். அங்கு அவர் சேர்த்த சொத்துக்களை கொண்டு காக்கிநாடாவில் 1600 ஏக்கர் நிலத்தில் கல்வி நிறுவனங்களை தொடங்கினார். அக்காலத்திலேயே 8 லட்சம் ரூபாயை கல்விக்கு அளித்தார். இப்போது அது பலநூறு கோடிகளுக்கு சமம். தமிழ்நாட்டின் செங்கல்வ நாயகர் போன்று ஆந்திராவின் கல்வி வள்ளல் சத்தியலிங்க நாயகர் என புகழப்படுகிறார். ஆந்திர மாநில பள்ளி பாடநூலில் இவரது வரலாறு இடம்பெற்றுள்ளது.


“பொன்னமண்டா லட்சுமணசாமி வர்மா”


பொன்னமண்டா லட்சுமணசாமி வர்மா, ஆந்திர மாநில வன்னியர்களின் தந்தை என போற்றப்படுகிறார். இவர் கோரங்கி துறமுக நகரில் 1869 பிறந்தார். கிழக்குக் கோதாவரி மாவட்ட அக்னிகுல சத்திரிய மகா சங்கத்தின் தலைவராக இருந்த இவர் போராடி, ‘பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் அனைத்து வன்னியர்களும் - தமிழகத்தில் 'வன்னியகுல சத்திரியர்கள்' என்றும் ஆந்திராவில் 'அக்னிகுல சத்திரியர்கள்' என்றும் அழைக்கப்படுவார்கள் என்றும் 1929ஆம் ஆண்டில் சென்னை மாகாண சபை தீர்மானம் நிறைவேற்ற செய்தார். இன்று வன்னியர்களின் சாதி சான்றிதழில் ‘வன்னியகுல சத்திரியா’ என்று குறிப்பிடப்படுவதற்கான அரசாணையை வெளியிட செய்தவர் இவர்தான். இவரது பிறந்தநாள் ஆந்திர மாநில அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. 


இவ்வாறு, ஆந்திர மாநிலத்தின் வன்னியர் தலைவர்களாக போற்றப்படும் பினபோத்து கஜேந்துருடு, மல்லாடி சத்தியலிங்க நாயகர், கோபநாதி கிருஷ்ணம வர்மா, பொன்னமண்டா லட்சுமணசாமி வர்மா ஆகிய நால்வருமே பழம்பெரும் துறைமுக நகரமான கோரங்கியுடனோ அல்லது கப்பல் வணிகத்துடனோ தொடர்புடையவர்கள் ஆகும்.


------------

கோரங்கி துறைமுக நகரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பர்மா, மலேசிய இந்திய சமூகத்தில் வன்னியர்கள் முதன்மையாக இருந்தனர். இப்போது அந்த துறைமுகம் அழிந்து, கோரங்கி சதுப்புநிலக் காடுகளாக உள்ளது. பழங்கால கடல் வணிகத்தின் அடையாளமாக அங்கு இப்போது ஒரு பழைய கலங்கரை விளக்கத்தின் இடிபாடு மட்டுமே எஞ்சியுள்ளது.


“பின்னணி”


சோழர்களும் பல்லவர்களும் படையெடுத்து சென்ற பகுதிகள், ஆட்சி செய்த பகுதிகளில் இப்போதும் வன்னியர்கள் பரவலாக வாழ்கின்றனர். ஆந்திராவில் குலோத்துங்க சொழனின் தந்தை ராஜராஜ நரேந்திரனும், பின்னர் குலோத்துங்க சோழனும், அதன் பின் அவனது மகன் வீர சோழனும் ஆட்சி செய்த கோதாவரி படுகை பகுதியில் இப்போதும் வன்னியர்கள் பரவலாக வசிக்கின்றனர். 


இந்திய சாதி அமைப்பில் ஒரு சாதிக்கு ஒரு தொழில் என்கிற மரபில் இல்லாமல், பல்வேறு தொழில்களில் ஈடுபடும் ஒரு சமூகமாக வன்னியர்கள் இருக்கின்றனர். மன்னராட்சி காலத்தில் போர்த்தொழிலை கொண்டிருந்தவர்கள், அதன்பின் பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர்.


ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆந்திராவில் கடல்வணிகத்திலும் கப்பலோட்டும் தொழிலிலும் முன்னணியில் இருந்த வன்னியர்களின் கணிசமானோர் இப்போது மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.


ஒவ்வொரு சமுதாயமும் அவரவர் சமுதாய அடையாளங்களை ஆவணப்படுத்துவதும், கொண்டாடுவதும் இக்காலத்தின் தேவை ஆகும். அந்தவகையில் – ஆந்திர மாநில வன்னியர் வரலாற்று தலைவர்களான பினபோத்து கஜேந்துருடு, மல்லாடி சத்தியலிங்க நாயகர், கோபநாதி கிருஷ்ணம வர்மா, பொன்னமண்டா லட்சுமணசாமி வர்மா உள்ளிட்ட வரலாற்று நாயகர்களை போற்றுவோம்,


#Vanniyars #AgnikulaKshatriya

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.