ஈவ்லின்ஸ் துப்பாக்கிச் சூடு: இனவெறிப் பின்னணியா? கைதான 39 வயது நபர் குறித்த முழுத் தகவல்கள்!
(பாரிஸ், 23.10.2026 Ⓒ sci)
இன்று காலை 10.30 முதல் 11 மணி வரை ஈவ்லின்ஸ் (Yvelines) மாவட்டத்தின் ட்ராப் (Trappes) மற்றும் லா வெரியர் (La Verrière) பகுதிகளில், மகிழுந்தில் (வாகனத்தில்) வந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். சுமார் பதினைந்து நிமிடங்கள் நீடித்த இந்த வெறிச்செயலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்; 12 வயதுச் சிறுமி உட்படப் பலர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் மூவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த உள்துறை அமைச்சர் லோரன்ட் நுனேஸ் (Laurent Nuñez) தெரிவித்துள்ளார். குற்றத்தடுப்புப் பிரிவினர் (BAC) உடனடியாகத் தலையிட்டுத் தடுத்து நிறுத்தியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தாக்குதல்தாரியின் பின்னணி மற்றும் நோக்கம்:
கோயினியர் (Coignières) பகுதியில் வைத்துச் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்ட அந்தச் சந்தேக நபர், ஈவ்லின்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 39 வயதுடையவராவார். இவர் ஏற்கனவே சில சிறு குற்றங்களுக்காகக் காவற்துறையினரால் அறியப்பட்டவர். இந்தத் தாக்குதல், குடியேற்றவாசிகள் அல்லது குறிப்பிட்ட சிறுபான்மையினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட "இனவெறி மற்றும் இஸ்லாமிய வெறுப்பு" சார்ந்த பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என ட்ராப் நகர முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் சந்தேகிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, தேசியப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு (Pnat) இந்த வழக்கை அதிகாரபூர்வமாகக் கையில் எடுத்துள்ளது. இதற்கிடையே, கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் காவற்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். அங்கு மூன்று எரிவாயு உருளைகள் (gas cylinders) பொருத்தப்பட்டு, வீடு முழுவதும் வெடிகுண்டுகளால் அபாயகரமாகப் பொறிவைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். உடனடியாக வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் சிறப்புப் படையினர் அங்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அவரது வாகனமும் தற்போது தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை