ஆபிரிக்காவில் உயிரிழந்த புகலிட கோரிக்கையாளர்!!




 பிரித்தானிய அதிகாரிகளால் ஐந்து ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர், ஆபிரிக்க நாடான ஈஸ்வாத்தினியில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 


நீதிமன்ற உத்தரவின்படி 'KP' எனக் குறிப்பிடப்பட்ட 36 வயதான குறித்த நபர், கடந்த செப்டம்பர் 13ஆம் திகதி ஈஸ்வாத்தினியிலுள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியக் காவலில் இருந்த காலத்தில் இவர் பலமுறை உயிர் மாய்ப்புக்கு முயன்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 ஒக்டோபரில், டீகோ கார்சியாவில் படகுப் பழுது காரணமாகச் சிக்கிய நிலையில் அரச கடற்படையினரால் மீட்கப்பட்ட இவர், அங்குள்ள முகாமில் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு 2024இல் சர்வதேச பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட போதிலும், பாலியல் அத்துமீறல், தீ வைப்பு போன்ற குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டி பிரித்தானியாவுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு 2025இல் அவரது மேல்முறையீட்டு மனுவையும் பிரித்தானிய நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தீவில் வெளிச்சமில்லாத பொலிஸ் அறையிலும், துணி துவைக்கும் அறையிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்த இவரது நிலை குறித்து ஐ.நா அகதிகள் முகவரகம் கவலை வெளியிட்டிருந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.