இலங்கை பெண்ணுக்கு இந்தியாவில் வழங்கப்பட்ட தீர்ப்பு!!

 



இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்தியாவைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்ட நிலையில், தங்களது திருமணத்தை பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து வழக்கை முடித்துவைத்துள்ளது.


இலங்கையைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண், திருச்சி – லால்குடியைச் சேர்ந்த அருண்குமார் என்பவரை கடந்த ஜூன் 4ஆம் திகதி குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

தங்களது திருமணத்தை விசேட திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யுமாறு லால்குடி சார்பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி பவித்ரா, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சரவணன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மனுதாரர் கடந்த மே 14ஆம் திகதி ஒரு மாத சுற்றுலா இ-விசா மூலம் இந்தியாவுக்கு வந்ததாகவும், அவரது விசா காலம் ஜூன் 13ஆம் திகதியுடன் நிறைவடைந்த போதிலும் அவர் தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருப்பது விசா விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக அவரை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், மனுதாரர் கர்ப்பிணியாக இருப்பதை மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதையும், இந்தியாவில் அவரது கணவரைத் தவிர வேறு உறவினர்கள் எவரும் இல்லை என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, மனுதாரருக்கு தேவையான மருத்துவ உதவிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள திருமணம் சட்டரீதியாக முழுமையாக செல்லுபடியாகாத நிலையில் இருப்பதால், அதனை நேரடியாக பதிவு செய்ய சார்பதிவாளருக்கு உத்தரவிட முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

அதேவேளை, பொருத்தமான சட்டத்தின் கீழ் முறையாக திருமணம் செய்து அதனை பதிவு செய்வதற்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கினார்.

இந்த 60 நாட்கள் காலப்பகுதியில் மனுதாரரை நாடுகடத்தக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன், குறித்த காலத்திற்குள் திருமணம் சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டால், நடைமுறையில் உள்ள சட்ட விதிகளுக்கு உட்பட்டு பவித்ரா இந்தியாவில் தொடர்ந்து தங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். இதனையடுத்து, வழக்கு முடித்துவைக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.