யாழ்ப்பாணத்தின் குட்டி நெதர்லாந்தை தெரியுமா?

 


யாழ்ப்பாண கடலில் இருந்து சுமார் 45 நிமிட படகு பயணம். கடலை சுற்றி அமைதியாக கிடக்கும் ஒரு தீவு. அங்கு சென்றவுடன் நகர வாழ்க்கையின் பரபரப்பு மறைந்து, இயற்கையும் வரலாறும் மட்டுமே நம்மை சுற்றி நிற்கும்.


அந்த அழகிய தீவுதான் டெல்ஃப்ட் (Delft) தீவு. தமிழில் இது நெடுந்தீவு என்று அழைக்கப்படுகிறது.


யாழ்ப்பாண தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நெடுந்தீவு, இலங்கையின் மற்ற பகுதிகளில் எளிதில் காண முடியாத பல சிறப்புகளை

 கொண்டது.


பழைய கோட்டைகள், பவள கல் மதில்கள், பல நூற்றாண்டுகள் பழைமையான பாவோபாப் மரம், பழைய குதிரை தொழுவங்கள், மர்மமான கிணறுகள், பண்டைய தொல்பொருள் சின்னங்கள் என இந்த தீவு வரலாற்றின் பல பக்கங்களை  வைத்திருக்கிறது.


டெல்ஃப்ட் என்ற பெயர் எப்படி வந்தது?


நெடுந்தீவு என்பது அதன் பாரம்பரிய தமிழ் பெயர். நீண்ட தீவு என்ற அர்த்தத்தை கொண்டுள்ளது.


ஒல்லாந்தர் ஆட்சி காலத்தில் தீவுக்கு Delft என்ற பெயர் சூட்டப்பட்டது. யாழ்ப்பாணத்தை சுற்றியிருந்த பல தீவுகளுக்கு ஒல்லாந்தர்கள் அவர்களின் நாட்டில் உள்ள நகரங்களின் பெயர்களை வழங்கியிருந்தனர்.


அதில் டெல்ஃப்ட் என்ற பெயர் மட்டும் காலத்தை கடந்து இன்றுவரை பிரபலமாக உள்ளது.


கடலை கடந்து செல்லும் பயணம்


டெல்ஃப்ட் செல்ல முதலில் யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவான் துறைமுகத்தை அடைய வேண்டும்.


அங்கிருந்து படகில் கடலை கடந்து தீவுக்கு செல்லலாம்.


காலை நேரத்தில் படகில் பயணம் செய்யும்போது சுற்றிலும் நீல கடல் மட்டுமே தெரியும். கடல் அமைதியாக இருக்கும் நாட்களில் இந்த பயணம் மிகவும் அழகாக இருக்கும்.


தீவை அடைந்ததும் கார்கள் அதிகமாக காணப்படுவதில்லை. முச்சக்கர வண்டிகள், மிதிவண்டிகள் மற்றும் குதிரை வண்டிகள் போன்றவை இங்கு பயன்படுத்தப்படுகின்றன.


தீவின் மிக பிரபலமான குதிரைகள்


டெல்ஃப்ட் தீவை நினைத்தவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது அங்கு சுதந்திரமாக சுற்றி திரியும் குதிரைகள்தான்.


தீவின் வறண்ட பகுதிகளில் குதிரை கூட்டங்கள் கூட்டமாக சுற்றுவதை காணலாம்.


இவை உண்மையான காட்டு குதிரைகள் அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களால் வளர்க்கப்பட்ட குதிரைகளின் வழித்தோன்றல்கள். கால

போக்கில் தீவின் திறந்த நில பரப்பில் சுதந்திரமாக வாழ பழகி விட்டன.


காலனித்துவ காலத்தில் டெல்ஃப்ட் குதிரை வளர்ப்பு மற்றும் குதிரை வாணிபத்துக்கும் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்று செய்திகள் தெரிவிக்கின்றன.


பவள கற்களால் கட்டப்பட்ட மதில்கள்


டெல்ஃப்ட்டின் மற்றொரு தனி சிறப்பு அதன் பவள கல் மதில்கள்.


தீவில் கிடைக்கும் பவள கற்களை பயன்படுத்தி வீடுகள் மற்றும் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் இன்றும் பழைய பவள கல் மதில்களை பார்க்க முடியும்.


இந்த மதில்கள் டெல்ஃப்ட் தீவுக்கு தனியான தோற்றத்தை வழங்குகின்றன.


பழைய கோட்டை


தீவின் காலனித்துவ வரலாற்றை நினைவூட்டும் முக்கியமான இடம் பழைய கோட்டை.


போர்த்துக்கேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த கோட்டை பின்னர் ஒல்லாந்தர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக கூறப்படுகிறது.


பவள கற்களால் கட்டப்பட்ட இந்த பழைய கோட்டையின் சில பகுதிகள் இன்றும் காணப்படுகின்றன. அங்கு சிறை, ஆயுத கிடங்கு மற்றும் பிற அறைகளின் எச்சங்களையும் பார்க்க முடியும்.


கோட்டைக்கு அருகில் இருந்த பழைய நிர்வாக வளாகமும் அக்காலத்தின் வரலாற்றை நினைவூட்டுகிறது.


பழைய புறா கோபுரம்


டெல்ஃப்ட்டில் காணப்படும் வித்தியாசமான வரலாற்று சின்னங்களில் ஒன்று பழைய புறா கோபுரம்.


சிறிய சிறிய துளைகள் நிறைந்த இந்த கட்டிடம், ஒல்லாந்தர் காலத்தில் தகவல் அனுப்புவதற்காக புறாக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கான சுவடாக கருதப்படுகிறது.


இலங்கையில் இது போன்ற கட்டமைப்புகள் மிகவும் அரிதானவை.


ராணியின் கோபுரம்


தீவின் தென்பகுதியில் Queen’s Tower எனப்படும் பழைய கோபுரம் உள்ளது.


கடல் வழி பயணங்களை கண்காணிப்பதற்கும் தகவல் தொடர்புக்கும் இந்த கோபுரம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.


காலநிலை தெளிவாக இருக்கும் நாட்களில் இங்கிருந்து இந்தியாவை நோக்கிய கடற்பகுதியை காண முடியும்.


பல நூற்றாண்டுகள் பழைமையான பாவோபாப் மரம்


டெல்ஃப்ட்டின் இயற்கை அதிசயங்களில் முக்கியமானது பாவோபாப் (Baobab) மரம்.


ஆபிரிக்க பகுதிகளில் இருந்து பழைய கடல் வணிக பாதைகள் வழியாக இந்த மரம் இலங்கைக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.


தீவில் உள்ள பாவோபாப் மரத்தின் தண்டு மிகவும் பெரியது. அதன் உட்பகுதிக்குள் பலர் நிற்க கூடிய அளவுக்கு அது அகலமாக உள்ளது.


பல நூற்றாண்டுகளாக வெயிலையும் மழையையும் கடந்து நிற்கும் இந்த மரம், டெல்ஃப்ட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது.


வற்றாத ‘பிசாசின் கிணறு’


மழை பொழிவு குறைவான டெல்ஃப்ட்டில் தண்ணீர் மிகவும் முக்கியமானது.


தீவில் ஆறுகள் இல்லை. மழைநீர், குளங்கள் மற்றும் கிணறுகளே முக்கிய நீராதாரங்கள்.


அவற்றில் ‘பிசாசின் கிணறு’ (Devil’s Well) என்று அழைக்கப்படும் கிணறு மிகவும் பிரபலமானது.


வறட்சி காலத்திலும் இந்த கிணறு வற்றுவதில்லை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.


பழைய பௌத்த சுவடுகள்


டெல்ஃப்ட் தீவு இந்து மற்றும் காலனித்துவ வரலாற்றுடன் மட்டுமல்லாமல், பண்டைய பௌத்த வரலாற்றுடனும் தொடர்புடையது.


தீவின் சில பகுதிகளில் பழைய பௌத்த தூபிகளின் இடிபாடுகள் காணப்படுகின்றன.


அங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் இந்த தீவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மக்கள் நடமாட்டமும் மத தொடர்புகளும் இருந்ததை எடுத்து காட்டுகின்றன.


இராட்சத பாத சுவடு


டெல்ஃப்ட்டில் உள்ள மற்றொரு சுவாரஷ்யமான இடம் ‘இராட்சத பாத சுவடு.


பாறையில் பெரிய பாதம் போன்ற வடிவம் காணப்படுகிறது.


இதனை பற்றி பல்வேறு உள்ளூர் நம்பிக்கைகள் உள்ளன. இந்து மரபில் இது அனுமனுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.


வரலாறும் மக்கள் நம்பிக்கைகளும் ஒன்றாக கலந்திருப்பது டெல்ஃப்ட்டின் தனி சிறப்புகளில் ஒன்றாகும்.


மறைந்து போன காலத்தின் குதிரை தொழுவங்கள்


தீவில் பழைய குதிரை தொழுவங்களின் எச்சங்களும் உள்ளன.


ஒரு காலத்தில் குதிரைகள் வளர்க்கப்பட்டதற்கான சான்றுகளாக பழைய சுவர்கள் மற்றும் கிணறுகள் காணப்படுகின்றன.


இன்று அதே தீவில் சுதந்திரமாக சுற்றும் குதிரைகளை பார்க்கும்போது, டெல்ஃப்ட்டின் பழைய வரலாறு இன்னும் உயிருடன் இருப்பதை போன்ற உணர்வு ஏற்படுகிறது.


ஏன் டெல்ஃப்ட்ஐ பார்க்க வேண்டும்?


கடல் பயணம், அமைதியான கிராம சூழல், பவள கல் மதில்கள், பழைய கோட்டை, புறா கோபுரம், ராணியின் கோபுரம், பாவோபாப் மரம், குதிரை கூட்டங்கள், பண்டைய தொல்பொருள் சின்னங்கள் என டெல்ஃப்ட்இல் பார்க்கவும் அறியவும் நிறைய இருக்கிறது.


இது வெறும் சுற்றுலா தலம் அல்ல.


யாழ்ப்பாண கடலுக்குள் இயற்கையும் வரலாறும் ஒன்றாக வாழும் ஒரு தனி உலகம் — அதுதான் டெல்ஃப்ட் தீவு.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.