வடமாகாண ஏற்றுமதி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!!
வட மாகாணத்தின் உற்பத்திப் பொருட்களையும் சேவைகளையும் சர்வதேசச் சந்தைகளுடன் இணைத்து, உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், 'வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027' அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20, 21ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டைச் சிறப்பாக முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று (13.10.2026) செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதனை முன்னெடுப்பதில் ஆளுநர் செயலகம், மாகாண சபை மற்றும் மாவட்டச் செயலகங்கள் இணைந்து செயற்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் காணப்படும் உற்பத்தி வளங்களைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி, அவற்றுக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்துவதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்கள், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரை வெளிநாட்டுக் கொள்வனவாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுடன் நேரடியாக இணைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.
விவசாயம், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், பனைசார் உற்பத்திகள், கடற்றொழில் மற்றும் கடலுணவுப் பொருட்கள், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள், தகவல் தொழில்நுட்பச் சேவைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இயற்கை நலவாழ்வுப் பொருட்கள், சுகாதார உபகரணங்கள், சுற்றுலா, மரபுரிமை மற்றும் பண்பாட்டுத் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இம்மாநாட்டில் முக்கியத்துவம் பெறவுள்ளன.
இலங்கை முகாமைத்துவக் கழகத்தின் ஏற்பாட்டில், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் தலைமையில், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படுகிறது.

.jpeg
)





கருத்துகள் இல்லை