ஞானசாரதேரர் வங்கி அதிகாரி மூலம் தப்பிச் சென்றாரா!!

 



கலகொட அத்தே ஞானசார தேரர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் வங்கி அதிகாரி ஒருவர் எதிர்வரும் ஒக்டோபர் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


மூன்று நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு குறித்த அதிகாரி உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

களனியைச் சேர்ந்த அந்த வங்கி அதிகாரி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டபோதே, கொழும்பு முதன்மை நீதவான் அஸங்க எஸ். போதரம இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததை அறிந்திருந்தும், சந்தேக நபரான வங்கி அதிகாரி தனது வாகனத்தில் தேரரை இராஜகிரியவிலிருந்து எல்பிட்டிய பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதாகக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஞானசார தேரர் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கு உதவியமை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மீறியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டனைச் சட்டக்கோவையின் அடிப்படையில் சந்தேக நபருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையாததால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.