அமைச்சருக்கும் மக்களுக்கும் முரண்பாடு!!

 



தொழிற்சாலையொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் ஆய்வுசெய்ய சென்ற அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோவிற்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பரவிய தூசி மற்றும் நச்சு இரசாயனக் கழிவுகளை ஆய்வுசெய்ய சென்ற போதே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.


அறிவியல் சோதனை அறிக்கைகளைப் பெறுவதற்கு முன்பு, தவறான தகவல்களை கூறி மக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் சம்பந்தப்பட்ட தரப்பினரை கடுமையாக எச்சரித்துள்ளார்.

தீ விபத்தால் ஏற்பட்ட சாம்பலும் தூசியும், சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் இருநூறு மீட்டர் தொலைவில் உள்ள வீடுகளின் மீதும் விழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே தொழிற்சாலை வளாகத்தில் மீதமுள்ள நச்சு இரசாயனங்களை வேறு இடத்திற்கு எடுத்துச் சென்று அப்புறப்படுத்துமாறும், இல்லையெனில் மேலும் பலருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தீயை அணைக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரின் மூலம் இரசாயனங்கள் நிலத்தடி நீரிலோ அல்லது சுற்றியுள்ள சூழலிலோ கசிந்துவிட்டனவா என்றும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தீயை அணைப்பதற்கு தண்ணீரை பயன்படுத்துவது இயல்பான முறை என்றும், இதுபோன்ற சூழ்நிலையில் ஆதாரமின்றி முடிவுக்கு வரக்கூடாது என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிவியல் அறிக்கைகள் வருவதற்கு முன்பே, மரங்களின் பழங்களைக்கூட உண்ண முடியாது என்று கூறி பொதுமக்களை பீதியடைய செய்வது பொறுப்பற்ற செயல் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோன்ற பேரிடர் சூழ்நிலையில், அரசியல் நலன்களைப் பொருட்படுத்தாமல் அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.