தீபாவளி(லி) !!! - கந்தையா பத்மநாதன்!!
அடிக்கடி திரையில் கன்னி கழியும்
சினிமா நாயகி போல இன்று
அடிக்கடி தூறிய தூறலில்
நனைந்த பூமி சகதியாகிக் கிடந்தது !
கஞ்சி கூடக் காலமைப் பசிக்கு
காச்சி வைக்காமல் கௌரிகாப்புக்கு
அஞ்சி கோயிலுக்குப் போன
பெண்சாதி வரும் வரைக்கும்
பசியில கிடந்து நடுங்கும்
வருத்தக்காரப் புருசனாய்
முற்றத்து மல்லிகைப் பந்தல் மாதிரி
ஒழுகிக்கொண்டிருக்கிற ஏழை வீட்டுக்
குசினி அடுப்பில படுத்துக் கிடந்த பூனை
நடுங்கிய படி குந்தி இருந்தது !
பண்டிகைக்குப் பண்டிகை
அறிக்கை விடும் அரசியல்வாதி மாதிரி
அற நனைஞ்ச நாய் ஒண்டு
வழக்கம் போல தன் பாட்டில் ஒழுகும்
வானம் பார்த்து ஊளையிட்டுக் கொண்டிருந்தது !
பண்டிகைக்கால போனசைப்
பார்க்காத அப்பாவித் தொழிலாளி
மாதிரி மழையில் நனைஞ்ச
வாழை மரங்கள் இலைகுனிஞ்சு நிற்க
விரதகாலத்தில் வரும் தீபாவளி
தினக் கிடாய் மாதிரி பனை மட்டும்
தினவோடு நிமிர்ந்தே நின்றது !
ஒன்லைனில் கணக்கு படிப்பதாய்
கணக்கு விட்டுக் கொண்டு
பின்னொரு லைனில் ஒளித்திருந்து
பிக் பொஸ் பார்க்கும் பெடியள் மாதிரி
ஓலைக் கூரைக்குள்
ஒளிச்சிருந்த பல்லி ஒன்று
எட்டி எட்டிப் பார்த்து
எச்சரித்துக் கொண்டிருந்தது !
கொரோனாவால் வேலை இழந்தவர் மாதிரி
மாடு சூப்பிப் போட்டுக் கிடந்த நனைஞ்ச
பனங்கொட்டையில் இலையான்கள்
வைரசுக்குப் பயப்படாமல்
புடவைக் கடையில் மொய்க்கும்
மோட்டுச் சனங்கள் மாதிரி
மொய்த்துக் கொண்டிருந்தன !
காவலரைக் கண்ட மட்டில்
நாடியில் கிடக்கும் முகக் கவசத்தை
நாசியில் தூக்கிவிடும் நாதாரி கணக்காய்
நனைஞ்சு நடுங்கின நாயைக்
கண்ட பூனை மெல்ல நழுவிப் போனது
கவசம் போடாக் காவலர் மாதிரி
நாய் அதைக் கணக்கெடுக்கவே இல்லை !
அடைவு வைச்சு பெண்டில் பிள்ளைக்கு
பண்டிகைக்கு புடவை எடுத்த
அப்பாவிப்புருசன் மாதிரி
மழை பெய்வதையே உணரா
உணர்ச்சி அற்றுப் போன
மாடு ஒண்டு தலை ஆட்டியபடியே
தெருவிலே நனைஞ்சபடி தன்பாடில் போனது !
சூரியன் மெல்லப் பதுங்கிப் பதுங்கி
வெளிவரக் கண்ட முகில்கள்
கொரோனா காலத்துப் பி எச் யைக்கண்ட
அன்னதான மடக் காரர் மாதிரி
அலறிக்கொண்டு ஓடின
மடங்கள் மூடப்பட்டதால் சாப்பிட வேறு
இடங்கள் கிடக்கா ஏழைகளின்
வயிறு போல வெய்யிலில் வீதி
கொஞ்சம் கொஞ்சமாய் எரியத் தொடங்கியது !
தீபாவளிப் பலகாரக் கடையை
தெருவில் நின்றபடி ஏக்கமுடன் எட்டிப் பார்க்கும்
ஏழைப் பையன் கணக்காய்
எதிர்த்த தொழிலாளி வீட்டை
எட்டிப் பார்க்கும் மழையில் நனைந்த
பசித்துக் களைத்த அணில் குஞ்சுக்கு
எங்கே தெரியப் போகுது
அவன் வீட்டு அடுப்பு எரிவதை மறந்து
எத்தனை நாட்கள் என்று !

.jpeg
)





கருத்துகள் இல்லை