இறுதி அஞ்சலி குறித்த அறிவிப்பு!!
சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சையின் பின்னர் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், நேற்று சனிக்கிழமை நள்ளிரவு காலமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கத்துக்கு (வயது 69) இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகத் தமிழர்கள் பெருந்திரளாக நாளை திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில் திரளவுள்ளனர்.
மண்ணின் மைந்தனை வழியனுப்பி வைக்கும் இறுதி நாளில், வல்வெட்டித்துறை நகர் வர்த்தகர்கள் முழுமையாகக் கடைகளை அடைத்துத் தமது மரியாதையைச் செலுத்தவுள்ளனர்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை திங்கட்கிழமை காலை 7 மணிக்கு அவர் வசித்த கல்றோட் வீதி, நெடியகாடு, வல்வெட்டித்துறை இல்லத்தில் ஆரம்பமாகும்.
அதனைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு அன்னாரது பூதவுடல் வல்வெட்டித்துறைச் சந்தியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அங்கு தமிழ்த்தேசிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலி உரைகள் இடம்பெற்றதன் பின்னர், இறுதிக்கிரியைகள் யாவும் நிறைவுபெற்று வல்வெட்டித்துறை – ஊறணி இந்து மயானத்தில் தகனக்கிரிகைகள் இடம்பெறவுள்ளன.
தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு இலங்கையின் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், பொது அமைப்புகள், தமிழ்நாட்டில் உள்ள தமிழ்த்தேசியத் தலைவர்கள், புலம்பெயர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது நெடியகாடு, வல்வெட்டித்துறையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது புகழுடலுக்குத் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மண்ணின் மைந்தனான சிவாஜிலிங்கத்தின் இறுதி அஞ்சலி நடைபெறும் நாளைய தினம் வல்வெட்டித்துறை நகரில் உள்ள சகல வர்த்தக நிலையங்களையும் அடைத்து மரியாதை செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை