உலகக் கிண்ணம் 2018 நம்பிக்கை நட்சத்திரங்கள் !

நம்பிக்கை நட்சத்திரங்கள் தொடரில் கடந்த இரு நாட்களாக இந்த

உலகக் கிண்ணத்தில் சாதிக்கத் துடிக்கும் வீரர்கள் சிலரைப் பார்வையிட்டோம். இன்று அந்த வரிசையில் இறுதியாக மேலும் நால்வர்...
லூயிஸ் சுவாரெஸ் - உருகுவே
சர்ச்சைக்குரிய விளையாட்டாளர். அதே அளவு உத்வேகத்துடன் ஆடுபவர் உருகுவேயின் லூயிஸ்ஸ் சுவாரெஸ்.
அபாரமான ஆட்டக்காரர். பார்சலோனா அணியில் லயனல் மெஸ்ஸிக்கு ஒரு வகையில் போட்டியாக இருப்பவர் என்றும் சொல்லலாம்.
சென்ற உலகக் கிண்ணப் போட்டியில் இத்தாலியின் ஜியோர்ஜியோ கியலீனியைக் கடித்ததற்காக போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். சர்ச்சைகளில் சிக்காமல் இருந்தால் சுவாரெஸ் தனி ஆளாக உருகுவேயை முன்னுக்குக் கொண்டுசெல்வார் என்பதில் ஐயமில்லை...

லயனல் மெஸ்ஸி - அர்ஜென்ட்டினா
யாருக்கும் அறிமுகம் தேவைப்படாத ஒருவர், அர்ஜென்ட்டினா நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி. அபாரமான கோல்களை அடிப்பவர், காலடியில் காற்பந்துக் கலைகளைக் காட்டக்கூடியவர்.
இருந்தாலும் மெஸ்ஸி இதுவரை உலகக் கிண்ணத்தில் சோபிக்கவில்லை. இதுதான் உண்மை! சென்ற போட்டியிலும் முதல் சுற்றில் நன்றாக ஆடினார், அதன் பிறகு சுமார்தான்.
இந்தப் போட்டியிலாவது பெயரைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் லயனல் மெஸ்ஸி.

நிக்லாஸ் சூலெ - ஜெர்மனி
ஜெர்மனியின் இளம் தற்காப்பு ஆட்டக்காரர் நிக்லாஸ் சூலெ.
பயன் மியூனிக் அணிக்குச் சிறப்பாக ஆடிவந்துள்ளார். ஆனால் தேசிய அணிக்கு எப்போதும் ஆடுவதில்லை.
இருந்தாலும் உலகக் கிண்ணப் போட்டியைப் பயன்படுத்திக்கொண்டு பெயர் பதித்துள்ள பல வீரர்கள் இருக்கின்றனர். அதனால் தற்போது ஆடிக்கொண்டிருப்போரைப் பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை சூலெ எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

கிலியென் இம்பாப்பே
பாரிஸ் செயின் ஜர்மானின் கிலியென் இம்பாப்பேக்கு வயது 19. உலகக் காற்பந்தில் அடுத்த தலைசிறந்த வீரர் இவர்தான் எனப் பலர் கருதுகின்றனர்.
பெரிய அணிகள் பல இம்பாப்பேயை வாங்க வரிசையில் நிற்கின்றன. வயது இவர் பக்கம். அதனால் இந்தப் போட்டியில் சற்றுத் தடுமாறினாலும் அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி பின்னால் சிறப்பாக ஆட வாய்ப்புள்ளது.
எனினும் இளம் விளையாட்டாளர்களுக்கு இருக்கக்கூடிய துடிப்புடன் ஆடினால் இந்தப் போட்டி இம்பாப்பேயின் உலகக் கிண்ணமாக அமையலாம்!

இன்னும் பல வீரர்கள் இருக்கின்றனர். நாம் குறிப்பிடாத சிலர் எதிர்பாராத விதமாகப் பெயர் பதிக்க முடியும். அதே வேளையில் அதிகம் எதிர்பார்ப்புகளைச் சுமக்கும் வீரர்கள் ஏமாற்றத்தைத் தரக்கூடும்.
இன்ப அதிர்ச்சிகளைத் தரும் ஆற்றல் என்றுமே உள்ளது உலகக் கிண்ணத்திற்கு!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.