முஸ்லிம் மக்களைப் பார்த்து, தமிழர்கள் பாடம் படிக்க வேண்டுமாம்?

இந்நாட்டில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 5 பேர், இராஜாங்க அமைச்சர்கள் இருவர், சுமார் 5 பிரதி அமைச்சர்களாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள். சுமார் 70 அரச நிறுவனங்கள்

ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்கள் வசம் உள்ளன எனவும் அவை மூலம் கிடைக்கும் அந்தச் சேவைகளும் போதாது என்று தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், முஸ்லிம்கள் தமது அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்தாலும் கூட, இதுதான் உண்மை. உண்மையில் நான் முஸ்லிம் மக்களைப் பாராட்ட விரும்புகிறேன். முஸ்லிம் மக்களைப் பார்த்து, தமிழர்கள் பாடம் படிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்ற த, மனோகரனின், ‘உள்ளதைச் சொல்கின்றேன் நல்லதைச் சொல்கின்றேன்’ நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“இந்நாட்டின், மொத்த சுமார் 200 இலட்சம் சனத்தொகையில், சுமார் 150 இலட்சம் சிங்களவர்கள், சுமார் 30 இலட்சம் தமிழர்கள், சுமார் 20 இலட்சம் முஸ்லிம்கள். இந்த அரசாங்கத்தை உருவாக்க வழங்கப்பட்ட சிறுபான்மைப் இன வாக்குகளில் தமிழர் வாக்குகளே பெரும்பான்மை வாக்குகள். ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 3 பேர், இராஜாங்க அமைச்சர் ஒருவர், பிரதி அமைச்சர்கள் மூன்று, பேர் தான் இருக்கிறோம் “தமிழர்களின் வாக்குகளை பயன்படுத்திக்கொள்ளும் அரசாங்கங்கள், தமிழர்களுக்கு உரிய அந்தஸ்தைத் தருவதில்லை. இதற்கு முன் இருந்த அரசாங்கங்களும் தரவில்லை. இந்த அரசாங்கமும் தரவில்லை. இதனால், தமிழர்களுக்கு, ‘எக்சகியூடிவ் பவர்’ என்ற அமைச்சரவை நிறைவேற்று அதிகாரம் போதுமானளவு கிடைப்பதில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளைப் பெறும்படி நான் பகிரங்கமாக அழைப்பு விடுத்தேன். ஒரு சிலர், எனது அந்த அழைப்பை விமர்சனம் செய்தார்கள். ஒரு சிலர், நான் சொல்வதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டார்கள். இன்று நிலைமை என்ன? தமிழர்களுக்கு அரசியல் தீர்வும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை. இதுதான் இன்று தமிழர்களின் நிலைமையா என்று நான் கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது? இந்த எனது கேள்வி வடக்கு, கிழக்கு, மலைநாடு, மேற்கு, தெற்கு என்று நாடு முழுக்க வாழும் தமிழர் மனங்களில் எதிரொலிக்கின்றது.

உண்மையில் தமிழர் மனசாட்சியின் குரல்தான் என் குரல். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணையாவிட்டால், உள்ளே இருக்கும் தமிழ் எம்.பிகளைத் தேடிப்பிடித்து, அவர்களுக்கு மேலதிக அமைச்சுப் பதவிகளை இந்த அரசாங்கம் கொடுக்க வேண்டும். தமிழ் அமைச்சர்களின் அமைச்சுகளுக்கு மேலதிக நிதி வளம் ஒதுக்க வேண்டும். ஆனால், இன்று தமிழ் அமைச்சர்களின் அமைச்சுகளும் மென்மேலும் பலவீனப்படுத்தப்படுகின்ற போக்கையே நாம் பார்க்கிறோம்.

இன்று இவை பற்றி யாராவது பேச வேண்டும். அதனால்தான், நான் இன்று பகிரங்கமாகப் பேசுகிறேன். இதன் மூலம் இது பற்றிய நாடு தழுவிய ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்த நான் விரும்புகிறேன். இது தமிழர் மத்தியில் பேசுபடு பொருளாக மாற வேண்டும். “இதனால், எமது அரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க நான் தயார் இல்லை. ஆனால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கவும் தயார் இல்லை. அரசாங்கத்துக்கு உள்ளே இருந்தபடியே, இயன்றளவு உள்போராட்டங்களைச் செய்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.