கர்நாடகாவில் காலா திரையிடப்படுமா?

''கர்நாடகாவில் ரஜினிகாந்தின் காலா படத்தை வெளியிட கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து பரிசீலிப்பேன்'' என்று கர்நாடகா முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார்.


காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராகவும் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்ததாக அந்த மாநில கன்னட அமைப்புகள் குற்றம்சாட்டின. இது அப்போதே கர்நாடகா மாநிலத்தில் பெரிய அளவில் எதிரொலித்து அவருக்கு எதிரான கருத்துக்களை உருவாக்கி இருந்தது. இந்த நிலையில் வரும் ஜூன் 7ஆம் தேதி ரஜினிகாந்தின் நடிப்பில் காலா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது.

இந்தப் படத்தை கர்நாடகா மாநிலத்தில் திரையிடக் கூடாது என்று கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை மற்றும் கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் சாரா கோவிந்த்தும், ''கர்நாடகா மாநிலத்தில் காலா படத்தை திரையிடக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆதலால், கர்நாடகாவில் காலா திரையிடப்படாது'' என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் குமாரசாமி, ''கர்நாடகாவில் காலா படத்தை திரையிடக் கூடாது என்று கன்னட அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. அதுகுறித்து பரிசீலிப்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்ற பின்னர், ''கர்நாடகா அணைகளில் தண்ணீர் இல்லை. வேண்டுமானால், ரஜினிகாந்த் இங்கு வந்து பார்த்து செல்லலாம்'' என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, ''கர்நாடகாவில் காலா படத்தை திரையிடுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக பேசிய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று கன்னட ஆதரவு அமைப்புகள் கோரிக்கை வைத்து இருந்தன.

தற்போது தமிழ்நாடு ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினரும் கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையில் காலா படத்தை திரையிட பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலும், இதுகுறித்து கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையுடன் பேசப்படும்'' என்று தெரிவித்து இருந்தார்.

''பாகுபலி 2'' படம் வெளியானபோதும், இதேபோன்று நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் கேட்டு இருந்தன. இவரும் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிரான கருத்துக்கள் தெரிவித்து இருந்தார் என்று கன்னட அமைப்புகள் குற்றம்சாட்டின. இதையடுத்து சத்யராஜ் வருத்தம் தெரிவித்து இருந்தார். பின்னர், அங்கு ''பாகுபலி 2 '' படம் வெளியானது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.