மார்க்சிஸ்ட் மாஜி எம்.எல்.ஏ மீது தாக்குதல்!

முன்னாள் எம்.எல்.ஏ டில்லிபாபு மீது தாக்குதல் நடத்திய செங்கம் டி.எஸ்.பி சுந்தரமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து, அவரைக் கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பசுமை வழிச் சாலைக்கு எதிராக திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக சென்ற முன்னாள் எம்.எல்.ஏ டில்லிபாபு செங்கத்திலுள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுள்ளார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அங்கு வந்த காவல் துறையினர், டில்லிபாபுவை கைது செய்து சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த காணொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில் டில்லிபாபு மீது தாக்குதல் நடத்திய செங்கம் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்தில், "டில்லிபாபுவை அடித்து இழுத்துச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையில் மனநிலை பாதித்து வெறி கொண்ட மிருகத்தைப் போல மிகக் கேவலமான வார்த்தைகளால் டில்லிபாபுவை இழிவுபடுத்தியதோடு, மூர்க்கத்தனமாக செங்கம் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி தாக்கியுள்ளார். மேலும் அவரிடமிருந்த அலைபேசியை வலுக்கட்டாயமாக பறித்து சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இத்தகைய நடவடிக்கையை தட்டிக்கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் கடுமையாகத் தாக்கி இழிவுபடுத்தி பேசியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு செங்கம் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தியின் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து, கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். சட்டத்தின்படி அவருக்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலிலேயே நடந்திருக்கிறது. அவரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டுமென்றும், குறைந்தபட்ச நாகரீகத்தையும், இந்திய சட்டங்களையும் மதித்து நடக்க கற்றுக்கொள்ளும் வரை மனிதர்களோடு அணுக வேண்டிய துறைகளிலிருந்து அவரை ஒதுக்கி வைக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய செங்கம் டி.எஸ்.பி., மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 30ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் மார்க்சிஸ்ட் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, "தனக்கெதிராக போராட்டங்கள் நடத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும் என்று ஆளுநர் மிரட்டி வருகிறார். ஒரு ஆளுநருக்கான முதிர்ச்சியான அணுகுமுறைகளின்றி தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து வருகிறார். எனவே பன்வாரிலால் புரோஹித் இந்த மாநிலத்தில் ஆளுநராகத் தொடர்வது தமிழக நலனுக்கும், ஜனநாயகத்திற்கும் உகந்தது அல்ல. மத்திய அரசு உடனடியாக அவரை திரும்பப் பெற வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் சென்னையில் கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத், அ.சவுந்தரராசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.