ஆரக்கிளிடம் தோற்ற கூகுள் – 9 பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு!

கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் ஜாவா மொழி என்பது மிகமிக இன்றியமையதாது ஆகும். இது நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் டிவி, பிரிட்ஜ் உட்பட அனைத்து நவீன பொருட்கள் தொழில்நுட்பத்திலும் பயன்படுகிறது. கடந்த 1990ம் ஆண்டு சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனம் ஜாவா மென்பொருளை உருவாக்கியது. இதனை பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்தி வந்தன.
பின்னர், ஆரக்கிள் என்ற நிறுவனம் சன் மைக்ரோசிஸ்டத்தின் ஜாவாவை, அதன் அனுமதி பெறாமல் பரப்பியதாக குற்றச்சாட்டுக்கள் வந்ததையடுத்து, அந்த நிறுவனத்தையே ஆரக்கிள் விலைக்கு வாங்கிவிட்டது.
இந்நிலையில், கூகுள் நிறுவனம், மொபைலுக்கான சாப்ட்வேரில் ஜாவா மொழியை பயன்படுத்தியது. மேலும் அதற்கு ஆண்ட்ராய்டு டால்விக் என்று பெயரிட்டது. ஆனால், ஜாவாவிற்கும், கூகுளின் ஆண்ட்ராய்டு டால்விக் மென்பொருளுக்கும் பெரிதாக எந்தவிதமான வித்தியாசமும் இல்லை என்றும், ஜாவாவை தான், கூகுள் நிறுவனம் டால்விக் என்ற பெயரில் காப்பியடித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மேலும், இதன்மூலம் கூகுள் நிறுவனம் சுமார் 42 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஜாவா மென்பொருளின் உரிமத்தை வைத்துள்ள ஆரக்கிள் நிறுவனம், கடந்த 2009ம் ஆண்டு கூகுள் நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆனால் இந்த வழக்கில், 2012-ம் ஆண்டு கூகுளுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.
இதனையடுத்து, ஆரக்கிள் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. தொடர்ந்து நடந்த இந்த வழக்கில் மீண்டும் கூகுள் நிறுவனமே வெற்றி பெற்றது. ஆரக்கிள் நிறுவனமும் அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் அடிப்படையில், அடுத்தடுத்த கூகுளுக்கு எதிராக நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தது.
சுமார் 8 ஆண்டுகளாக கூகுள் நிறுவனத்துக்கும் ஆரக்கிள் நிறுவனத்துக்கும் நடந்த இந்த வழக்கில், தற்போது, கூகுள் நிறுவனம் காப்புரிமை மீறியதாக உறுதியாகியுள்ளதாகவும், எவ்வளவு நஷ்டஈடு வழங்கலாம் என்பது குறித்து கீழ் நீதிமன்றம் முடிவு செய்யும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தீர்ப்பில் கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தோல்வியடைந்த கூகுள் நிறுவனத்துக்கு சுமார் 9 பில்லியன் டாலர் வரையில் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எட்டு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் கூகுள் நிறுவனத்துக்கு எதிரான இந்த தீர்ப்பு அமைந்ததால் அந்நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 
Powered by Blogger.