பூவுக்குள் ஒரு பூகம்பம்.!

நிலவின் மென்மைக்கு
ஒப்பானவளாய்
கவிஞனின் கருவறையில்
உருவாகும்
பெண்மையின் மனவறையில்
உண்மைக்காய்
ஒரு புயலே பொங்கியெழுந்தது
அது
வங்கக் கடலோரம் நிகழ்ந்தது.

எங்கும் எதிலும் நிகழாத
சங்கொலில் ஒரு சந்ததியே
வெங்கொடுமைச் சாக்காட்டை
செங்குருதியால் காத்தது.

பத்திரகாளி
பார்வதியம்மன்
கண்ணகியம்மன்
கண்முன்னே இல்லாத
கடவுள்களை வரவழைக்க
பலநூறு நேர்த்தியிட்டும்
எண்ணைக்குள் பொரிக்கபட்ட
எம் பிள்ளையை காப்பாற்றவும்
கொத்தணிக் குண்டு மழையில்
தத்தளித்த தாய்மையை
மீட்டெடுக்கவும்
வேண்டிய கடவுள்கள்
வேதனையை விரட்டவும் இல்லை!
சாதனையை நிகழ்த்தவும் இல்லை!

பசிக்காய் அழும் குழந்தைக்கு
தன் குருதியை
முலைப்பாலாய் ஊட்டும்
பெண்மையே
ஊழியை விரட்டும் பத்திரகாளியாய்
நிமிர்ந்தெழுந்தாள்.

தன் இனத்திற்காய்
இரத்தத்தை சிந்தி
தன்மானப் பெண்ணாய்
தரணியை வென்றாள்.

கண்ணுக்கு முன்னால்
காக்கும் கடவுளாக
பூவுக்குள் ஒரு பூகம்பத்தை
உருவாக்கினாள்.

தார் வீதியில்
தகதகக்கும் கொதிப்பில்
காடுமேட்டின்
கரடுமுரட்டு நிலத்தில்
பாதணியே இல்லாது
விடுதலையெனும்
வேத வாக்கிற்காய்
சுடுகலன் சுமந்தாள்.
ஓடும் நதியாகி
ஒவ்வொரு கணமும்
எரியும் தீயாகி

வரியோடு வந்தாள்.
தூயவன் 08.03.18
Powered by Blogger.