மனிதம் என்ற புனிதம் எங்கே??

தாயிழந்த குஞ்சுகளை
தழுவும் தந்தையவன்
" என்ன செய்வேன் ?" என கதற
மனமோ விம்மி வெடிக்கிறது.
மா பாவிகளின் இருதயமோ
சிறுத்துப் போனதே
சில்லறைச் சுகங்களால்....

புலம்பெயர்ந்த சில புண்ணியங்களும்
இவர் பெயரால் கையேந்தி
வயிறாற உண்டு குடித்தொரு
உல்லாசம் காண்கின்றாரே...
ஆட்சி ஏறும்வரை
இவர் பெயரை உச்சரித்து
ஓட்டுக் கேட்டவர்கள்
ஒருதீர்வும் காணாது
ஒட்டுண்ணி வாழ்வேகி
ஒய்யார வாழ்வு பெற்றார்.
கேடு கெட்ட தமிழர்களாய்
தெருவெங்கும் சண்டியராய்...
நயவஞ்சகக் குழிபறித்து
குலம் புதைக்கும் பெருமை பெற்றார்.
ஒரு குலமாய் நின்று
ஒரு நல்ல தீர்வு பெறும்
எண்ணங்கள் எவர்க்கும் இல்லை.
அவன் செயலில் பிழை என்றும்
இவன் செயலில் பிழை என்றும்
பிழை கண்டு பிழை கண்டு சுயநலமாய்
பிழைப்பு நடந்திப் பிழையானார்.
ஒன்று கூடி வடமிழுக்கும்
ஒற்றுமை தனை மறந்தார்.
ஒற்றுமை காக்க மாண்ட
மாவீரச் செம்மல்களை
உரைத்தொரு கேடுகெட்ட
உழைப்பு உழைக்கும் கயவர் பலர்.
சிறுத்து நொந்து வாடும் இவர்
வேதனைகள் விம்மலிலே
பிச்சை பெறும் வழி கண்டார்.
நோவிலே குளிர்ச்சி பெறும்
நேயமற்ற மனம் படைத்தார்.
சிறுவர் அமைப்பென்பார்
மகளிர் அமைப்பென்பர்
மௌனமாய் இருப்பதற்காய்
சாதனை விருதும் பெறுவர்.
சாவின் பின்னர் வந்து
சபை ஏறிப் பேசும் வாய்களுடன்
ஊமையரல்ல நாம் என
உரைப்பதில் மார் தட்டுவர்.
இறப்புத் தான் இவர்களின்
இருப்பை காட்டுதென்றால்
இங்கு மனிதமென்ற புனிதம்
இருக்கிறாதா சொல்லுங்களேன்.???
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
11:45 Pm.

Powered by Blogger.