எமது விடுதலைப் போராட்டம் நிச்சயம் வெற்றியடைந்தே தீரும்.தேசியத் தலைவர்!

எமது விடுதலைப் போராட்டம் நிச்சயம் வெற்றியடைந்தே தீரும்.
உலகில் எங்குமே நடைபெறாத கொடுமைகள் தமிழீழ மண்ணில் நாளாந்தம் நடைபெறுகின்றன. எமது எதிரியோ ஈவிரக்கம் இல்லாதவன்.

மனித உயிருக்கு மதிப்பளிக்காதவன். மனித தர்மங்களைப் பெனாதவன். மிகவும் பயங்கரமான இனவெறி கொண்டவன். இனரீதியாக எமை ஒழித்துக்கட்டுவதைவிட அவனுக்கு வேறு இலட்சியம் எதுவும் இல்லை. எம்மை இந்நாட்டுப் பிரஜைகளாகவோ அல்லது சாதாரண மனிதப் பிறவிகளாகவோ சிங்கள அரசு கருதவில்லை.

எம்மை ஏதோ அன்னியர்களாக, அடிமைகளாக, வாழத்தகுதியற்ற பிராணிகளாகவே இந்த அரசு கருதுகின்றது. எம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறை இதைத்தான் தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றது.


பொருளாதாரத்தடை, மீன்பிடித்தடை, எண்ணெய்த்தடை இப்படியாக அத்தியாவசியமான எல்லாவற்றுக்கும் தடைகளை விதித்து எமது சமூக பொருளாதார வாழ்வை, எமது நாளாந்த ஜீவாதார வாழ்வைச் சிதைக்க முயல்கின்றது இந்த அரசு. அத்துடன் மட்டுமே நின்றுவிடாது, ஆயுதப் படைகளை ஏவிவிட்டு அப்பாவி மக்களை அழித்தொழிக்கும் ஒரு அதர்மமான யுத்தத்தையும் எம்மீது தொடுத்திருக்கின்றது. இந்த யுத்தமானது, அப்பாவித் தமிழர் மீது தொடுக்கப்பட்ட யுத்தம், நிராயுதபாணிகளாக நிற்கும் மக்களைச் சுட்டுக்கொல்வதும், வெட்டிக்கொல்வதும் போன்ற இராணுவ வெறியாட்டங்கள் ஒருபுறமிருக்க விமானக் குண்டுவீச்சு, பீரங்கிக் குண்டு வீச்சு மூலம் தமிழீழத்தை ரணகளமாக்கி வருகின்றது சிங்கள அரச பயங்கரவாத ஓநாய்.

நாம் போராடி, இரத்தம் சிந்தி, எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும். எமக்கு வேறு வழியே இல்லை. ஒன்று அடிமைகளாக அழிந்தொழிய வேண்டும். அல்லது போராடிச் சுதந்திரமாக வாழ வேண்டும். இதுதான் எமது அரசியல் தலைவிதி. அதாவது, சுதந்திர தமிழீழத் தனியரசு தான் எமது பிரச்சினைக்கு ஒரே தீர்வு. இந்தத் தனியரசை அமைக்க நாம் எமது உயிர், உடல், ஆன்மாவை அர்ப்பணித்துப் போராடுவோம்.


எமது போராளிகளின் அற்புதமான தியாகங்களும், எமது மக்களாகிய உங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடுமே எமது போராட்டத்தை உலக அரங்கில் பிரசித்தப்படுத்தியுள்ளது.
நீதியையும், தர்மத்தையும் சுதந்திரத்தையும் இலட்சியமாகக் கருதிய எமது விடுதலைப் போராட்டம் நிச்சயம் வெற்றியடைந்தே தீரும்.

– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

1987ம் ஆண்டு மேதினத்தை முன்னிட்டு விடுத்த செய்தியிலிருந்து

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” 
Powered by Blogger.