தண்ணீரின் இயல்புகளும் நந்திக்கடல் கோட்பாடுகளும்!-பரணி கிருஸ்ணரஜனி!

எண்ணெய்க்கான புவிசார் அரசியல் ஓய்ந்து தண்ணீர் (கடல்) அரசியலுக்குள் நவீன உலகம் பிரவேசித்திருக்கிறது.

நாம் வாழும் பூமிப்பந்து முக்கால் பங்கு நீரால் சூழப்பட்டதுதான்.
மனித உடலின் பெரும் பகுதி கூட நீரால் ஆனதுதான்.

மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்ட தமிழீழத்தின் சூழமைவு,கேந்திர முக்கியத்துவம், அரசியல் எல்லாமுமே தண்ணீர்தான்.

இன்னொரு தமிழர் நிலமான தமிழகத்தை தமிழீழத்தோடு இணைப்பது கூட அதே தண்ணீர்தான்.

இந்த உளவியல், அரசியல், விஞ்ஞானம்,இயங்கியல் எல்லாவற்றினதும் கூட்டியக்கமாகவே பிரபாகரன் 'நந்திக்கடல்'நோக்கி நடந்தார்.

விளைவாக உருவானதே 'நந்திக்கடல்' கோட்பாடுகள்.

இதில் முக்கியமானது
'நந்திக்கடலின்' H2O கோட்பாடு.

நேரடி இன அழிப்புக்குள்ளான ஒரு இனக் குழுமம் தொடர்ந்து இன அழிப்பு அரசின் ஆளுகைக்குள் இருக்கும்போது அந்த இனக் குழுமத்திடமிருந்து ஐந்து வகையான அரசியல் உற்பத்தியாகும் என்கிறது 'நந்திக்கடல்'.

அழிவு அரசியல், அவல அரசியல், அடிபணிவு அரசியல், ஒப்படைவு அரசியல், சரணாகதி அரசியல் என்பவையே அவையாகும்.

சம காலத்தில் இன அழிப்பு அரசும் இரு வகையான அரசியலை கையிலெடுக்கும் என்கிறது 'நந்திக்கடல்'.

மேற்படி இனக் குழுமத்தின் இதுவரை கால அடையாளத்தையும், இருப்பையும், அரசியலையும் நிர்மூலம் செய்யும் நீக்க அரசியல், மற்றும் நினைவு அழிப்பு அரசியல் என்பவையே அவையாகும்.

தமக்குள்ளிருந்து உற்பத்தியாகும் மேற்படி தளம்பல் அரசியலையும், எதிரிகளால் உட் செருகப்படும் இத்தகைய நுணுக்க அரசியலையும் இரு துருவமாக எதிர் கொள்ளும் ஒரு இனக் குழுமம் அதை முறியடித்து ஒரு ' எதிர்ப்பு' அரசியல் வடிவத்தை கட்டியெழுப்பத் தவறினால் அந்த இனம் முற்றாக அழிந்து போவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று எச்சரிக்கிறது ' நந்திக்கடல்'.

இந்த இடத்தில்தான் ' நந்திக்கடல்' மேற்படி நிலையிலிருந்து இனக் குழுமங்கள் மீண்டு வர ஏதுவான H2O கோட்பாட்டை அறிமுகம் செய்கிறது.

H2O என்பது தண்ணீரின் இரசாயனப் பெயர். தண்ணீர் தனித்தும் வேறு மூலக் கூறுகளுடனும் இணையும் போது நிகழும் பல்வேறு இரசாயன, பெளதீக மாற்றங்களை குறியீடாக்கி போராடும் இனங்கள் தனித்தும், பல்வேறு வேறுபட்ட அரசியல் நிலைகளோடு பொருதும் போது நிகழும் மாற்றங்களை முன் வைத்தும் இந்த தற்காப்பு கோட்பாடை அறிமுகம் செய்கிறது 'நந்திக்கடல்'.

இந்த கோட்பாட்டின் மைய உள்ளடக்கம், தோல்வி மற்றும் அவல மனநிலையிலிருந்து போராடும் இனங்களை மீட்டெடுத்து அவர்களை ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவத்திற்குள் கொண்டு வருவதுதான்.

பின்பு எதிர் கொள்ளல், தற்காத்தல், ஒருங்கிணைதல், ஊடுருவுதல், தாக்குதல், அழித்தொழிப்பு செய்தல் என்று அதை நீட்டிச் செல்கிறது H2O கோட்பாடு.

வெளித் தோற்றத்தில் இராணுவ சொல்லாடல்களை போல் தோற்றமளிக்கும் இக் கோட்பாட்டின் உள்ளடக்கம் அடிப்படையில் போராடும் இனங்கள் துப்பாக்கியின்றி, இரத்தம் சிந்தாது இன அழிப்பு எந்திரத்தை எதிர் கொள்ளும் சூட்சுமங்களையே வடிவமைக்கிறது.
Powered by Blogger.