ஈபிடிபி நெப்போலியன் மற்றும் மதனராஜாவை நாடு கடத்துமாறு உத்தரவு!

2001 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 3 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் நெப்போலியன் மற்றும் மதனராஜா எனப்படும் இருவரும் நீதிமன்றில் ஆஜராகாது வௌிநாட்டில் தலைமறைவாகி வாழ்ந்து வருகின்றனர்.
வழக்கு தொடர்பில் கைதான மூவருக்கும் 2016 இல் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதுடன், அவர்களை நாடு கடத்தி யாழ். மேல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு இலங்கை அரசின் உயரதிகாரிகளுக்கு நீதிமன்றம் பணிப்புரை பிறப்பித்திருந்தது.
இதனடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் நடவடிக்கை எடுப்பதாக நீதிமன்றுக்கு அறிவித்திருந்தனர்.
இன்று குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நாடு கடத்தல் தொடர்பான மத்திய அதிகார சபையின் பொறுப்பதிகாரியான பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு குறித்த இரண்டு ஈபிடிபி உறுப்பினர்களையும் நாடு கடத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு யாழ். மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.