ரணிலுக்கு எதிரான பிரேரணையில் மைத்திரியும் கையொப்பம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணையில் ஜனாதிபதி மைத்திரிபாலவும் கையெழுத்திட்டுள்ளார் . ஜனாதிபதியும் மஹிந்தவும் இணைந்தே இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளனர் “என்றும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 “மூன்று வருடங்களாக இந்த அரசு மக்களை ஏமாற்றி வருவதால் நாம் பிரதமருககு; எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்.பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள 14 விடயங்களுள் 13 விடயங்கள் பிணை முறி மோசடி தொடர்பானதாகும்.

 14 ஆவது விடயம் கண்டிக் கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காமை தொடர்பானதாகும். ஆகவே, அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவற்றுடன் உடன்படுகிறோம். ஆனால்,எம்மிடம் ஒப்படைத்திருந்தால் இன்னும் பல விடயங்களை நாம் சேர்த்திருப்போம்.

 இந்த அரசு ஊழல்வாதிகளையும் கொலையாளிகளையும் பாதுகாத்து வருகின்றது.மேலும் ஊழல் வாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளையும் கொடுத்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு விற்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவீனம் அதிகரித்துள்ளது. இந்த விடயங்களையும் நாம் பிரேரணையில் உள்ளடக்கி இருப்போம்.

 இருந்தாலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயங்கள் அனைத்துடனும் நாம் உடன்படுகிறோம். இந்தப் பிரேரணை ஜனாதிபதியும் மஹிந்தவும் இணைத்து அமைத்த ஒரு விளையாட்டே.பிரேரணையில் 55பேர் கையெழுத்திட்டுள்ளனர் என்று கூறுகின்றனர். உண்மையில் 56 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அதில் முதலாவது கையெழுத்திட்டிருப்பவர் ஜனாதிபதிதான். கையெழுத்து தெளிவாகத்தெரியவில்லை. இருந்தாலும், அது ஜனாதிபதியின் கையெழுத்துத்தான்” என்று அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.