ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக லண்டனில் கொதித்து எழுந்த தமிழர்கள்!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வேதாந்த நிறுவனத்தின் ஓர் அங்கம். இந்த ஆலையின் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், ஆலையின் விரிவாக்கப் பணிகளை விரைவுப்படுத்துகிறது அந்நிறுவனம்.  இதற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர். ஆலையிலிருந்து வெளியாகும் விஷப் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு மக்களுக்குச் சிறிய பாதிப்பு முதல் புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாக அம்மக்கள் அஞ்சுகின்றனர்.
பல வருடங்களாக நீடிக்கும் இந்தப்போராட்டம், தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் குமரெட்டியபுர கிராம மக்கள். அதோடு, குழந்தைகளோடு போராட்டக் களத்திலும் இறங்கினர்.  உண்ணாவிரதம் இருந்து கைதாகி, பின் ஜாமினில் வெளிவந்தார்கள்.

இந்தப் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக, நேற்று (மார்ச் 24) முறையாக அனுமதி பெற்று பேரணியும் பொதுக்கூட்டமும் நடத்த திட்டமிருந்தனர். ஆனால், சட்டம் ஒழுங்குப் பிரச்னையக் காரணமாகக் கூறி பேரணி செல்வதற்கு அனுமதி மறுத்துவிட்டது காவல்துறை. ஆனபோதும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் பெரும் அதிர்வலையை அரசியல் வட்டத்தில் கிளப்பியுள்ளது. இந்நிலையில் லண்டனில் உள்ள தமிழர்கள் அங்குள்ள ஸ்டெர்லைட் ஆலையின் இயக்குநர் அனில்
அகார்வாலின் வீட்டின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கருத்துகளை அடங்கிய பதாகைகளை உயர்த்தியபடி, பொதுமக்களுக்குப் பேராபத்தை விளைவிக்கும் ஆலையை மூடச் சொல்லி கோஷங்கள் எழுப்பியுள்ளனர். 
Powered by Blogger.