மஹிந்தவின் பங்காளி டுபாயில் வைத்து கைது!

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் மிக் ரக விமான கொள்வனவுகளில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பாக டுபாயில் வைத்து கைது
செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும், உதயங்க வீரதுங்கவிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் அவரை கண்டுபிடிக்க முடியாத வகையில் அவர் தலைமறைவாக இருந்தார். தற்போது அவரை டுபாய் பொலிஸார் கைது செய்துள்ளனர் என ராஜித தெரிவித்துள்ளார்.
என்றாலும் நினைத்த மாத்திரத்தில் அவரை இலங்கைக்கு அழைத்து வர முடியாது எனச் சுட்டிக்காட்டிய அவர், இந்த விடயம் தொடர்பில் ராஜதந்திர செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு அதன் பின்னர் அவரை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உதயங்க வீரதுங்கவை கைது செய்தது போல, மத்திய வங்கி ஊழலுடன் தொடர்பு பட்ட அர்ஜுன் மகேந்திரனையும் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ராஜித மேலும் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.