மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் சாம்பியன்!

சிம்பாப்வேயில் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிச் சுற்றின் இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய ஆஃப்கானிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.சிம்பாப்வேயில் 10 நாடுகளுக்கு இடையே நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் – ஆஃப்கானிஸ்தான் அணிகள் நேற்று போட்டியில் பங்கேற்றன.
இந்த போட்டியில் முதலில் துடுப்பாடத் தீர்மானித்த மேற்கிந்திய தீவுகள் அணி, ஆஃப்கானிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சால் 46.5 ஓவர்களில் 204 ஓட்டங்கள் பெற்று சுருண்டது.
அதிகபட்சமாக ரோமன் பவெல் 44 ஓட்டங்களையும் , ஹெட்மெயர் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளும், குல்பாடின் நயீப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து 205 எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்ப் வீரர்கள் ஷெசாத் – நயீப் ஜோடி நல்ல ஆரம்பத்தை கொடுத்தது.
முதல் விக்கெட்டுக்கு 58 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் 14 ஓட்டங்களை பெற்று நயீப் ஆட்டமிழந்தார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு ஷெசாத்துடன் கைகோத்த ரஹ்மத் ஷா, ஆஃப்கானிஸ்தான் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.
இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 90 ஓட்டங்கள் சேர்த்தது.
ஷெசாத் 84 ஓட்டங்களையும், நயீப் 51 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
40.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஆஃப்கானிஸ்தான் அணி போட்டியில் வெற்றி இலக்கை எட்டியது.
இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய ஆஃப்கானிஸ்தான் அணி, முதன்முறையாக உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் சாம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.