பாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன், பிரதமர் அப்பாசி சந்திப்பு!

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப், அந்த நாட்டின் உயர் நீதித்துறையுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்.
இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசாரை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியை சேர்ந்த பிரதமர் அப்பாசி நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு திடீரென சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு தலைமை நீதிபதியின் அறையில் நடந்தது.
இந்த சந்திப்புக்காக பிரதமர் அப்பாசி, வழக்கமான பாதுகாப்பு மரபுகளை கடைப்பிடிக்காமல், சாதாரண முறையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தார். அவரை தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் வரவேற்றார்.
அட்டார்னி ஜெனரல் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தலைமை நீதிபதி-பிரதமர் சந்திப்பு நடந்தது என சுப்ரீம் கோர்ட்டு மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தார்.
2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு, இணக்கமான முறையில் நடந்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது அல்லது விவாதிக்கப்பட்டது என உறுதிபடத்தெரியவில்லை. இருப்பினும் இந்த சந்திப்பு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கட்சித்தலைவரான ஷெபாஸ் ஷெரீப்புடன் பிரதமர் அப்பாசி தொலைபேசியில் தொடர்புகொண்டு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை சந்திப்பதற்கு ஒப்புதல் பெற்றதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் இந்த ஆண்டு பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், தொகுதிகளை மறுவரையறை செய்வது பற்றி பிரதமரும், தலைமை நீதிபதியும் கருத்து பரிமாற்றம் செய்தாகவும், பிற சட்ட விஷயங்கள் குறித்தும், பொது நல வழக்குகளில் விசாரணையை துரிதப்படுத்துவது பற்றியும் பேசிக்கொண்டதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சந்திப்பின் நிறைவில் பிரதமர் அப்பாசியும், தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசாரும் புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுத்தனர். 
Powered by Blogger.