தனிப்பட்டவர்களின் தேவைகளுக்காக நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கவில்லை!

தனிப்பட்டவர்களின் தேவைகளுக்காக நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கவில்லை. மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை எதிர்கால திட்டங்களாக முன்னெடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வரா விட்டால் , மாற்று அரசியல் சக்தியாக செயற்பட வேண்டிய நிலை உருவாகும் என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடக சந்திப்பு புதன் கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் , அமைச்சர் சம்பிக ரணவக்கவின் எதிர்கால பொருளாதார கொள்கை திட்டம் குறித்து அமைச்சரவையில் பேசப்பட்டது. அதனை முன்னெடுக்காவிட்டால் மாற்று அரசியல் சக்தியினை உருவாக்கியேனும் முன்னெடுப்போம் என்ற விடயத்தினை நான் வலியுறுத்தினேன். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் இந்த விடயத்தை வெளிப்படையகவே கூறினேன். 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்குவரும் போது பொது மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகள் உள்ளன. நல்லாட்சி அரசாங்கம் என்ற வகையில் அவற்றை நாங்கள் நிறைவேற்ற வேண்டும். எமது தாமத நிலையை உள்ளுராட்சிமன்ற தேர்தலில் மக்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர். அர்த்தமற்ற முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டு ஆட்சியை முன்னெடுக்க முடியாது. கொள்கைகளில் இருந்து வெளியேறி செயற்படவும் முடியாது. யாருடைய தனிப்பட்ட விடயங்களுக்காகவும் நல்லாட்சி அரசாங்கத்தை நாங்கள் உருவாக்க வில்லை. ஆகவே மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளுக்கு அமைவான எதிர்கால திட்டத்தினையே அமைச்சர் சம்பிக்க ரணவக்க அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்தார். அதனை முன்னெடுக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன் வரவேண்டும். நாட்டு மக்கள் அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து எதிர்பார்ப்புடன் உள்ளனர். அவை நிறைவேற்றப்படாத பட்சத்தில் தேர்தல்களில் பின்னடைவுகளே ஏற்படும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.