அதிகாரங்களைப் பறிக்கும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்!

நாடாளுமன்றத்தின் அதிகாரங்களைப் பறிக்கும் சட்டமூலத்திற்கு எதிராக சகலரும் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என, மஹிந்த ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பனர் பந்துல குணவர்தன கேட்டுக் கொண்டுள்ளார்.
சொத்துக்களை முகாமைத்துவம் செய்யும் புதிய சட்டமூலம் குறித்து கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘சொத்துக்களை முகாமைத்துவம் செய்யும் சட்டமூலம் குறித்த விவாதம் எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது. இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு இருக்கும் நிதி அதிகாரத்தைப் பறித்து, நாடாளுமன்றத்தைத் தரைமட்டமாக்கியுள்ளது.
பிரதமரைப் பிரதானமாகக் கொண்டு துறைசார் அமைச்சர்கள் தங்களுக்கு இலாபம் கிடைக்கும் வகையில், சில உடன்படிக்கைகளுக்கு அமைய உள்நாட்டு வெளிநாட்டு உதவியாளர்களிடமிருந்து மொத்தமாக கடனைப் பெற்றுக் கொள்ள, இந்த சட்டமூலம் வழி செய்கிறது.
இது மிகவும் பயங்கரமானது.
அவ்வாறு கடனைப் பெற்றுக் கொள்ள முன்னின்று செயற்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சிவில், மற்றும் குற்றவியல் சட்டப்பிரிவில் குற்றம் சுமத்த முடியாத வகையில் அவர்களைப் பாதுகாப்பதாக இந்த சட்டமூலம் அமைந்துள்ளது.பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போதும், நம்பிக்கையில்லாப் பிரேரணை பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளார்.
இலங்கை வரலாற்றில், மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி போன்றதொரு மோசடி எங்கும் நடைபெற்றது இல்லை. பிணைமுறியினால் இதுவரையில் 2000 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக நாம் நாடாளுமன்றில் நிரூபித்துள்ளோம். இந்த சட்டமூலம் குறித்து நாம் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல உறுப்பினர்களிடமும் ஒன்றைக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
கட்சி விசுவாசத்திற்கும் கட்சியின் நிலைப்பாட்டிற்கும் அப்பால் சென்று, நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைப் பறித்து எடுக்கும் இந்த சட்டமூலத்திற்கு எதிராக, எதிர்வரும் புதன்கிழமை உங்கள் வாக்குகளை பயன்படுத்துங்கள்’ என நாடாளுமன்ற உறுப்பனர் பந்துல குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Powered by Blogger.