பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சார்கோசி தடுத்து வைத்து விசாரணை!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சார்கோசி (Nicolas Sarkozy) தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 2007 இல் இடம்பெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு லிபியாவின் முன்னாள் தலைவர், மறைந்த முவம்மர் கடாபி நிதியுதவி வழங்கியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இவரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Nicolas Sarkozy க்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள இரண்டாவது பாரிய நீதி விசாரணை இதுவென தெரிவிக்கப்படுகின்றது.
2012 இல் இடம்பெற்ற தேர்தலில் அதிகரித்த செலவீனம் தொடர்பிலும் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், கடாபியின் நிதியுதவி தொடர்பான குற்றச்சாட்டை மறுத்துள்ள Sarkozy, இது கொடூரமான மற்றும் முறையற்ற குற்றச்சாட்டு என குறிப்பிட்டுள்ளார்.
கடாபியின் முன்னாள் உளவுப்பிரிவு தலைவரினால் சார்கோசியின் பிரசாரப் பணிப்பாளருக்கு 6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் 2013 இல் பிரான்ஸ் விசாரணைகளை ஆரம்பித்தது.
2007 இல் சார்கோசி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் லிபியாவின் முன்னாள் தலைவர் மறைந்த முவம்மர் கடாபியை நாட்டுக்கு அழைத்தமை தொடர்பிலும் அவர் விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
Powered by Blogger.