பிரேரணையைத் தோற்கடிக்க ஐ.தே.க உறுதியான தீர்மானம்!

ஐக்கிய தேசியக் கட்சியில் விரிவான மறுசீரமைப்பை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மேற்கொள்வதற்கு கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இணக்கம் எட்டப்பட்டிருப்பதோடு கட்சியின் இந்த முடிவை அதிருப்திக் குழுவினரும் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் ஸ்ரீகொத்தா வட்டாரம் தெரிவித்தது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றக் குழு ஏகமனதாக உறுதியளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் உருவான அரசியல் நெருக்கடி நிலை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பெரும் குழப்பச் சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், கூட்டு எதிரணியினர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்திருக்கும் சூழலில் கட்சியின் செயற்குழு நேற்று வியாழக்கிழமை கட்சித் தலைமையகம் ஸ்ரீகொத்தாவில் பிரதமர் தலைமையில் கூடியது. சமீபகாலமாக கட்சிக்குள் உருவான நெருக்கடி நிலையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்ட நிலையில் கொள்கைகள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினதும் கட்சி மறுசீரமைப்பு தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சர் ருவன் விஜேவர்தன குழுவினதும் அறிக்கைகள் செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. சஜித் அறிக்கையில் 38 முன்மொழிவுகளும் ருவன் விஜேவர்த்தன அறிக்கையில் 27 முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இவற்றை செயற்குழு விரிவாக ஆராய்ந்ததன் பின்னர் சில முடிவுகளை பிரதமர் செயற்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் அடுத்த இரண்டு மாதங்களுக்கிடையில் கட்சியில் முழுமையான மறுசீரமைப்பை மேற்கொள்ளவும். இது குறித்து ஏப்ரல் 5, 6, 7 ஆம் திகதிகளில் கூடி ஆராய்ந்து அவசியமான முடிவுகளை எட்டமுடியுமெனவும் புதுவருடத்துக்கு முன்னர் உடன்பாட்டைக் காண்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கட்சியின் மறுசீரமைப்பு குறித்த யோசனைகளை புதுவருடத்துக்குப் பின்னர் கூடும் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்துக்கு சமர்ப்பித்து இணக்கம் காண்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் கட்சிக்குள் உருவாகியிருந்த முறுகல்நிலை முடிவுக்குக்கொண்டு வரப்பட்டதன் காரணமாக அடுத்த வாரம் (ஏப்ரல் 4இல்) பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தின்போது கட்சி எந்தவித முரண்பாடுமின்றி நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஏகமனதான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இந்த முடிவை எடுத்த நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை அச்சமின்றி முகம்கொடுக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அரசில் உள்ள பங்காளிக் கட்சிகளும் சாதகமான முடிவுகளை எடுக்கும் நிலை உருவாகியுள்ளதால் பெரும்பான்மைப் பலத்துடன் பிரேரணையை தோற்கடிக்க முடியுமென பிரதியமைச்சர் ஹர்ஷ டி. சில்வா தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மஹிந்த தரப்புக்குச் சாதகமான ஓரிருவரை தவிர ஏனையவர்கள் அரசாங்கத்தை நெருக்கடி நிலையிலிருந்து காப்பாற்றும் பொருட்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்திருப்பதாக தெரிய வருகின்றது.

சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இந்த விடயத்தில் கூடுதல் கரிசனை காட்டி வருவதாகவும் தெரியவருகிறது.

இவ்வாறான திடீர் திருப்பங்கள் காரணமாக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்திருக்கும் கூட்டு எதிரணி தடுமாற்றமடைந்துள்ளதாகவும் இதனை சமாளிப்பதற்கு மாற்று வழிகளை தேடிக்கொண்டிருப்பதாகவும் அறிய வருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.