ஜனாதிபதியின் அதிகாரம் இரத்தாகாது!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறினால் ஜனாதிபதியின் அதிகாரமும் இரத்தாகும் என்ற கூற்றை அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று நிராகரித்தார்.
அரசியலமைப்பில் அவ்வாறு எந்த சரத்தும் கிடையாது என்று குறிப்பிட்ட அவர் பாராளுமன்றத்தில் பிரதமருக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டால் வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளிட்ட அவர்,
பொதுமக்களின் வாக்குகளினால் தான் ஜனாதிபதி தெரிவாகினார். நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறினாலும் ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு எந்த பாதிப்பும் எழாது எனவும் அவர் தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறினால் ஜனாதிபதியின் அதிகாரமும் ரத்தாகும் என அமைச்சர் வஜிர அபேவர்தன கூறியிருப்பது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், அரசியலமைப்பின் 48 (1) சரத்தின் பிரகாரம் பிரதமர் பதவி தொடர்பில் ஏதும் மாற்றம் நடந்தால் அமைச்சரவை இரத்தாகும். ஜனாதிபதியின் அதிகாரத்ததிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அமைச்சர் வஜிரவின் கூற்றில் சட்டபூர்வமான நியாயம் எதுவும் இல்லை.
நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறினால் ஜனாதிபதிக்கு ஏதும் பாதிப்பு ஏற்படும் என யாப்பில் குறிப்பிடப்படவில்லை.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளவரே பிரதமராக நியமிக்கப்படுகிறார். பொரும்பான்மை இல்லாவிட்டால் வேறு ஒருவர் நியமிக்கப்படுவார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் 4 ஆம் திகதிக்கு முன்னர் கூடி சு.க முடிவு செய்யும்.தனிப்பட்ட அபிப்பிராயங்களின் படி அன்றி ஏகமனதான முடிவு மத்திய குழுவிலும் பாராளுமன்ற குழுவிலும் எட்டப்படும் என்றார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றை கொண்டுவருவதாக ஐ.தே.க பின்வரிசை எம்.பிகள் கூறியிருப்பது பற்றியும் இங்கு வினவப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவருவதற்கு நியாயமான அடிப்படையிருக்க வேண்டும். காரணமின்றி கொண்டுவர முடியாது. நல்லாட்சியை ஏற்படுத்தவே அவர் பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் . எந்தச் சவாலையும் எதிர்கொள்ள ஜனாதிபதியும் நாமும் தயாராக இருக்கிறோம் என்றார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் சரத் அமுனுகம. நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஜனாதிபதி தொடர்பில் எந்தக் குற்றச்சாட்டும் கிடையாது. யாருக்கு எதிராக அதில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவு .
சபாநாயகரிடம் இந்தப் பிரேரணை கையளிக்கப்பட்டு அது ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை ஏற்பதா? இல்லையா? என்பதை சபாநாயகர் தான் முடிவு செய்வார்.
19 ஆவது திருத்தத்தின் கீழ் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர முடியாது என்கின்றனர்.
ஆனால் சபாநாயகர் பிரேரணையை ஏற்று ஒழுங்குப் புத்தகத்தில் சேர்த்துள்ளார். 4 ஆம் திகதி விவாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் சு.க கூடி முடிவு செய்யும் என்றார்
Powered by Blogger.