சென்னையில் பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்!

மினி பேருந்து ஓட்டுநரை புதன்கிழமை இரவு குடிபோதையில் சில இளைஞர்கள் தாக்கியதாகக் கூறி சென்னை முகப்பேர் கோல்டன் பிளாட்ஸ் அருகே சாலையில் திடீரென நிறுத்தப்பட்ட பேருந்துகள்.
சென்னை முகப்பேர் கோல்டன் குடியிருப்புப் பகுதி அருகே மினி பேருந்து ஓட்டுநரை போதையில் இருந்த 3 இளைஞர்கள் தாக்கினர். இதைக் கண்டித்து பேருந்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் புதன்கிழமை இரவு அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
எஸ் 42 வழித்தட எண் கொண்ட மினி பேருந்து சென்னை மதுரவாயலில் இருந்து கொரட்டூர் நோக்கி புதன்கிழமை இரவு சென்றது. பேருந்தை ஓட்டுநர் அன்பு ஓட்டிச் சென்றார். 10.15 மணியளவில் சென்னை முகப்பேர் கோல்டன் குடியிருப்புப் பகுதி அருகே அந்த பேருந்து சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் பேருந்தை மடக்கி நிறுத்தினர். ஓட்டுநர் அன்பிடம் தகராறு செய்த மூவரும், உருட்டுக் கட்டையால் சரமாரியாக அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநர்108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். 
இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை அப்பகுதி வழியாகச் சென்றவர்களும், பேருந்து பயணிகளும் விரட்டினர். இதில் ஒரு இளைஞர் மட்டும் வாகனத்துடன் பிடிபட்டார். இரு இளைஞர்கள் தப்பியோடினர்.
இச்சம்பவத்தை அறிந்த மாநகரப் பேருந்து ஓட்டுநர்கள், ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவத்தை அறிந்த கொரட்டூர் காவல் நிலையப் போலீஸார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தாக்குதல் நடத்திய அந்த 2 பேரையும் உடனடியாகப் பிடித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் எனத் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் பலர், பேருந்து ஊழியர்களின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திடீர் போராட்டம் முடிவுக்குவந்தது. 
பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞர்களில் பிடிப்பட்ட ஒருவரை போலீஸார் கொரட்டூர்காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.
Powered by Blogger.