புத்தபகவானே பிறந்தகமே போய்விடுங்கள்..!

அல்லாவின் பிள்ளைகளே!
அமைதி கொள்ளுங்கள்
இது புத்தரின் புதல்வனின்
இரத்தத்தை அடையாளமிடும்
எரிப்புக்கள் வதைப்புக்கள்
சிற்றினம் என்பதால் சிதைப்புகள்
ஊரடங்கு நியதியிலும்
கொழுந்து விடும் எரிப்புக்கள்.
அல்லாவின் பிள்ளைகளே!
அமைதி கொள்ளுங்கள்.
தமிழின அழிவு போல்
ஓரழிவு உமக்கும் வேண்டாம்.
ஞானம் பெற்ற
புத்தனின் பிள்ளைகள்
இங்கு யாருமே இல்லை.
சத்தியமாய் புத்தன் யாருடைய
சதையிலும் இரத்திலும் இல்லை.
புத்தனுக்கு அட்டகாசம் தெரியாது.
புத்தனுக்கு அடிதடி பிடிக்காது.
புத்தனுக்கு அரசபோக விருப்பில்லை.
புத்தனுக்கு அன்பு மட்டும் ஞான மொழி.
கலகக் கூத்தாடிகளுக்கு
புத்தன் அப்பனாய் இருக்க முடியாது.
சிலவேளை சிங்கத் தோன்றல்கள் தான்
இவர்களாக இருக்கலாம்.
பேசித் தீர்க்க முடியாத
பிரளயமா கண்டியிலே?
ஒருவனின் உயிருக்காய்
எத்தனை பதை பதைப்பு.
கொத்துக் கொத்தாக
கொல்லக்கூடாத தடை ஆயுதத்தால்
கொன்று குவித்தாரே தமிழரை...
அப்போது மட்டுமேன் இந்த
பதை பதைப்பு வரவில்லை?
அரசு ஒன்றெனில் ஏனிந்த பாரபட்சம்?
அப்பனே! புத்த பகவானே!
ஆறாத அலையடிப்பாய்
போர் பறித்த தமிழர் வலி
இன்னும் ஆறலையே தீரலையே.
நீதியும் கிடைக்கலயே.
அதற்குள்,
அல்லாவின் பிள்ளைகளையும்
உமது புதல்வர் கொன்றிட்டால்
தீராப் பழி சுமப்பீர்.- இன்னும்
அவமானம் சுமந்து நிற்பீர்.
காவியுடைக்குள் உமது
கட்டளைகளைகள் இல்லையப்பா.
ஆதலால் தான் உம்மிடம்
கெஞ்சிக் கேட்கின்றேன்.
உண்மையிலே நீர் உமது
பிறந்தகமே போய்விடும்.
உன் பெயரால் இங்கினி
உயிர்ப் பலிகள் வேண்டாமே.
உதிரநதி வேண்டாமே.
அமைதி இல்லா நாட்டில்
அடையாளமாய் நீர் எதற்கு?

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.