"21 வருடங்களுக்குப் பிறகு மக்களிடையே விழிப்புஉணர்வு ஏற்பட்டுள்ளது"

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, 3 -ம் நாள் பிரச்சாரத்தினை ம.தி.மு. க பொதுச் செயலாளர் வைகோ நேற்று மாலை தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் துவக்கினார்.

தாமிரபரணி தூர்வாரி, தூய்மைப் படுத்தும் பணிக்காக ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்ததாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சமீபத்தில் கூறினார். ஆனால், அவர் கூறிய அதை அன்றே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மறுத்துள்ளார். இதைப் குறித்து செய்தியாளர்கள் கேட்டதுக்கு பதிலளித்த வைகோ, "மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எந்த அடிப்படையில் கூறினார் என்று தெரியவில்லை. அதைப் பற்றி முதலமைச்சருக்கே ஒன்றும் தெரியாமல் இருக்கிறது என்று நினைக்கும் போது வேதனை அளிக்கிறது" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தினை கடந்த 21 வருடங்களுக்கு முன்பே நான் ஆரம்பித்து விட்டேன். கடந்த 1997, ஜூன் 2 -ம் தேதி, ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து நடைப்பயணம் சென்றேன். அதோடு மட்டுமல்லாமல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்து, நானே வாதாடி அந்த ஆலையை மூடிட தடை வாங்கினேன் . ஆனால், ஸ்டெர்லைட் ஆலைத்தரப்பு, டெல்லியில் உச்சநீதி மன்றத்திற்குச் சென்று, நான் பெற்ற தடையை உடைத்து ஆலையை மீண்டும் இயக்க ஆரம்பித்து விட்டனர். தற்போதும் அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து உள்ளேன்.
வேதாந்தா குழுமத்தினை நார்வே நாட்டினர் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளனர். 21 வருடங்களுக்குப் பிறகு நான் எதிர்பார்த்த படி மக்களிடையே விழிப்புஉணர்வு வந்துள்ளது. தூத்துக்குடியில் மக்கள் கொதித்து எழுந்துள்ளனர். இவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தற்காலிகமாக ஆலையை மூடியது எல்லாம் வெறும் கண்துடைப்பு தான். எனவே இந்த ஆலையை நிரந்தரமாக மூடும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.
தற்போது எனக்கு எதிராகக் கறுப்பு கொடி காட்ட பாஜக நண்பர்கள் திட்டமிட்டுள்ளனராம். பிரதமர் மோடிக்கே கறுப்பு கொடி காட்டிய தமிழர்கள் நாங்கள். எனக்கு இவர்கள் கறுப்பு கொடி காட்டியவுடன் நான் பயந்து பிரதமரைப் போல விமானத்தில் ஏறி வெளிநாட்டுக்கு ஓடிப்போய் விட மாட்டேன். இங்கேயே தான் சுற்றிக்கொண்டிருப்பேன். கவலைப் படவேண்டாம். இதில் இருந்தே மத்திய அரசு ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலியாக மாறி விட்டது என்பதை நன்கு அறியமுடிகிறது" என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.