சிங்கப்பூரில் இந்திய யோகா ஆசிரியருக்கு 9 மாதம் சிறை!

பயிற்சி பெற வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை செய்த வழக்கில் சிங்கப்பூரில் இந்திய யோகா ஆசிரியருக்கு 9 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு அளித்தார்.சிங்கப்பூர் வாழ் இந்தியர், ராகேஷ் குமார் பிரசாத். இவர் அங்கு உள்ள டாம்பைன்ஸ் ஹவுசிங் எஸ்டேட் பகுதியில் யோகா பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர் தன்னிடம் பயிற்சி பெற வந்த 25 வயதான பெண்ணிடம் தன் பலத்தை பயன்படுத்தி, பாலியல் தொல்லை செய்து உள்ளார். ஒரு முறை அல்ல, பல முறை அவர் இவ்வாறு நடந்து உள்ளார்.
2015-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், யோகா ஆசிரியர் ராகேஷ் குமார் பிரசாத் மீது சிங்கப்பூர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 2016-ம் ஆண்டு விசாரணை தொடங்கியது. 12 நாட்கள் நடந்த விசாரணையின்போது அரசு தரப்பு வக்கீல் ஜேம்ஸ் சேவ் வாதிட்டபோது, “பாதிக்கப்பட்ட பெண், மிகுந்த அதிர்ச்சி அடைந்ததால்தான் யோகா பயிற்சியில் இருந்து உடனடியாக வெளியேறவில்லை. அப்போது உதவிக்கு ஆளின்றி என்ன செய்வது என்று தெரியாமல் அவர் தவித்து உள்ளார். யோகா ஆசிரியர் என்ற தனது பொறுப்பை ராகேஷ் குமார் பிரசாத் தவறாக பயன்படுத்தி இந்த குற்றத்தை செய்து உள்ளார். அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், 3 பிரம்படிகளும் வழங்க வேண்டும்” என கூறினார்.
விசாரணை முடிந்த நிலையில், ராகேஷ் குமார் பிரசாத் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கண்டறிந்த நீதிபதி லூக் டான், அவருக்கு 9 மாதம் சிறைத்தண்டனையும், ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராதமும் (சுமார் ரூ.50 ஆயிரம்) விதித்து தீர்ப்பு அளித்தார்.
ராகேஷ் குமார் பிரசாத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால், அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி லூக் டான் உத்தரவிட்டார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.